தீபாவளி பண்டிகையையொட்டி தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் இயக்கம் - தென்மேற்கு ரெயில்வே தகவல்
தீபாவளி, துர்கா பூஜை பண்டிகையையொட்டி தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தென்மேற்கு ரெயில்வே கூறியுள்ளது.
பெங்களூரு,
தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தீபாவளி, துர்கா பூஜையையொட்டி தென்மேற்கு ரெயில்வே சார்பில் 42 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது கூடுதலாக மேலும் 10 சிறப்பு ரெயில்களை இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு செய்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (06235) வருகிற 24-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 1-ந் தேதி வரை தினமும் இயக்கப்பட உள்ளது. அதன்படி தூத்துக்குடியில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 9.55 மணிக்கு மைசூருவை சென்றடையும்.
* மறுமார்க்கமாக மைசூரு-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் (06236) வருகிற 23-ந் தேதியில் இருந்து நவம்பர் 30-ந் தேதி வரை தினமும் இயக்கப்படுகிறது. மைசூருவில் இருந்து இரவு 6.20 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 11.15 மணிக்கு தூத்துக்குடிக்கு செல்லும்.
* கன்னியாகுமரி-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (06525) வருகிற 25-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 2-ந் தேதி வரை தினமும் இயக்கப்பட உள்ளது. கன்னியாகுமரியில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 7.25 மணிக்கு பெங்களூருவை வந்தடையும்.
* மறுமார்க்கமாக பெங்களூரு-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் (06526) வருகிற 23-ந் தேதி முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 30-ந் தேதி வரை தினமும் இயக்கப்பட உள்ளது. பெங்களூருவில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் மாலை 5 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும். இவை உள்பட 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு தென்மேற்கு ரெயில்வே கூறியுள்ளது.
Related Tags :
Next Story