எதிர்க்கட்சியினரை மிரட்டவும், குரலை ஒடுக்கவும் எத்தனை முறை சிபிஐ, அமலாக்கப் பிரிவை மத்திய அரசு பயன்படுத்தும் - உமர் அப்துல்லா கேள்வி
எதிர்க்கட்சியினரின் குரலை ஒடுக்க எத்தனை முறை சிபிஐ, அமலாக்கப் பிரிவு , ஊழல் தடுப்புப் பிரிவைப் மத்திய பாஜக அரசு பயன்படுத்தும் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்ரீநகர்,
தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான பரூக் அப்துல்லாவிடம் மாநில கிரிக்கெட் அமைப்பின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
காஷ்மீர் மாநிலத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக, ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்துக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நிதி உதவி வழங்கி வந்தது. கடந்த 2005-2006 நிதியாண்டு முதல் 2011-2012 நிதியாண்டு வரை ரூ.94 கோடியே 6 லட்சத்தை கிரிக்கெட் வாரியம் அளித்தது.
இந்த பணத்தில் ரூ.43 கோடியே 69 லட்சம் கையாடல் நடந்ததாக ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்க முன்னாள் நிர்வாகிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. பின்னர், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா எம்.பி. உள்பட 6 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதை அடிப்படையாக வைத்து அமலாக்கப் பிரிவும் வழக்குப் பதிவு செய்து சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்டத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவிடம் விசாரணை நடத்தி வருகிறது.
ஸ்ரீநகரில் உள்ள அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்கு இன்று காலை 84 வயதான பரூக் அப்துல்லா நேரில் விசாரணைக்கு ஆஜரானார்.
இந்நிலையில், பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கப் பிரிவு நேரில் விசாரணை நடத்துவதற்கு அதிருப்தி தெரிவித்து அவரின் மகனும், முன்னாள் முதல்-மந்திரியுமான உமர் அப்துல்லா டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
'இன்று என் தந்தைக்கு 84-வது பிறந்த நாள். எதிர்க்கட்சியினரை மிரட்டவும், குரலை ஒடுக்கவும் எத்தனை முறை சிபிஐ, அமலாக்கப் பிரிவு, ஊழல்தடுப்பு அமைப்புகளைப் பாஜக அரசு பயன்படுத்தும். உங்களின் சதித்திட்டம் என்ன என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன்.
யாரேனும் மத்திய அரசுக்கு எதிராகப் பேசினால், துணிச்சலாக பிரிவினைவாத அரசியலை எதிர்த்தால் அவர்கள் வேட்டையாடப்பட்டு, சம்மன் அனுப்பி வைக்கப்படும் என பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story