மேற்கு வங்காள துர்கா பூஜை கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி நாளை உரை


மேற்கு வங்காள துர்கா பூஜை கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி நாளை உரை
x
தினத்தந்தி 21 Oct 2020 8:44 PM IST (Updated: 21 Oct 2020 8:44 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காள துர்கா பூஜை கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி நாளை மெய்நிகர் முறையில் உரை நிகழ்த்த உள்ளார்.

கொல்கத்தா,

நவராத்திரியையொட்டி மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் இருந்த போதும், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் துர்கா பூஜைக்கு பல்வேறு தரப்பினரும் ஏற்பாடுகளை தொடங்கி வருகின்றனர். நாளை (22-ந் தேதி) முதல் 26-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் துர்கா பூஜைக்காக மாநிலமே வெகு விமரிசையாக கொண்டாட தயாராகி வருகிறது.

இந்த ஆண்டு முதல் முறையாக பா.ஜனதாவின் மகளிர் அணி சார்பில் சால்ட் லேக் பகுதியில் உள்ள கிழக்கு மண்டல கலாசார மையத்தில் சிறப்பு விழா ஒருங்கிணைக்கப்படுகிறது. இதில் நாட்டுப்புற கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான சவுரவ் கங்குலியின் மனைவியும், புகழ்பெற்ற ஒடிசி கலைஞருமான டோனா மற்றும் அவரது குழுவினரின் நடன நிகழ்வுகள் தொடக்க விழாவில் நடக்கிறது.

இந்த கொண்டாட்டங்களில் முக்கிய அம்சமாக, பிரதமர் மோடியும் மெய்நிகர் முறையில் நாளை உரையாற்றுகிறார். துர்கா பூஜையின் முதல் நாளான மகா சாஸ்தி அன்று பிரதமர் நிகழ்த்தும் உரை, இந்த ஆண்டு கொண்டாட்டத்துக்கு முத்தாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமரின் நாளைய உரை கிழக்கு மண்டல கலாசார மையம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் 10 பூஜை பந்தல்களில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 

Next Story