கொரோனா சிகிச்சை: இவர்மெக்டின் மருந்துகளை பயன்படுத்த தடை; மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு
கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் இவர்மெக்டின் மருந்துகளை பயன்படுத்த தடை விதிக்க மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வைரசுக்கு எதிராக சிகிச்சை அளிக்க பல்வேறு மருந்துகளை மத்திய அரசு பரிந்துரைத்து வருகிறது. தொடக்க நிலை பாதிப்பு கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மலேரியா தடுப்பு மருந்து வகையை சேர்ந்த ஹைடிராக்சி குளோரோ குயின் பயன்படுத்தப்படுகிறது.
கொரோனா வைரசின் பாதிப்பு மித அளவில் உள்ளோருக்கு, வரையறுக்கப்பட்ட அவசரகால பயன்பாட்டுக்காக ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்தி கொள்ள அரசு முன்பே பரிந்துரை வழங்கி விட்டது.
இதேபோன்று டாசிலிஜுமப் என்ற மருந்தும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் சிகிச்சை அளிக்க பல்வேறு மருந்துகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
எனினும், விலை குறைந்த மற்றும் பாதுகாப்பு நிறைந்த இவர்மெக்டின் மருந்து ஸ்கேபிஸ் மற்றும் ஒட்டுண்ணி சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. உத்தர பிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களும் கொரோனா சிகிச்சையளிப்பதற்கு இந்த மருந்துகளை பயன்படுத்தி வந்தது.
ஆனால், உலகம் முழுவதும் நடந்த மருத்துவ பரிசோதனை முடிவில், போதிய பாதுகாப்பின்மை மற்றும் நிவாரணியாக இல்லாதது ஆகியவற்றால், இந்த மருந்துகளை கொரோனா சிகிச்சைக்கு பரிந்துரைக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுபற்றி மத்திய அரசின் கொரோனா சிகிச்சைக்கான தேசிய அதிரடி படை மற்றும் சுகாதார அமைச்சகத்தின் கூட்டு கண்காணிப்பு குழு ஆகியவை அடங்கிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கொரோனா வைரசின் பாதிப்பிற்குள்ளாகும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒட்டுண்ணி தடுப்பு மருந்துகளான இவர்மெக்டின் மருந்துகளை கொரோனா வைரசுக்கான தேசிய கிளினிகல் நிர்வாக விதிமுறைகளில் சேர்ப்பதில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
Related Tags :
Next Story