பதுக்கலை தடுக்க வெங்காயத்தை இருப்பு வைக்க வியாபாரிகளுக்கு வரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி


பதுக்கலை தடுக்க வெங்காயத்தை இருப்பு வைக்க வியாபாரிகளுக்கு வரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
x
தினத்தந்தி 23 Oct 2020 11:45 PM GMT (Updated: 23 Oct 2020 11:24 PM GMT)

பதுக்கலை தடுப்பதற்கு வெங்காயத்தை இருப்பு வைப்பதில் வியாபாரிகளுக்கு மத்திய அரசு வரம்பு நிர்ணயித்து உள்ளது.

புதுடெல்லி, 

வெங்காயம் அதிகமாக விளையும் ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வெங்காய அறுவடை பாதிக்கப்பட்டு, சந்தைக்கு அவற்றின் வரத்து குறைந்தது. இதனால் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த தட்டுப்பாடு காரணமாக வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாய்க்கு மேல் போய்விட்டது. விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டன. வெங்காயத்துக்கான இறக்குமதி விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியது. மேலும், மத்திய தொகுப்பில் இருந்த வெங்காயத்தை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க முன்வந்தது.

இந்த நிலையில், தட்டுப்பாட்டை காரணம் காட்டி வியாபாரிகள் அவற்றை பதுக்கி, கொள்ளை லாபம் சம்பாதிக்க நினைத்ததற்கும் மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டு இருக்கிறது. அதாவது, வியாபாரிகள் வெங்காயத்தை இருப்பு வைப்பதற்கு மத்திய அரசு வரம்பு நிர்ணயம் செய்துள்ளது.

இதன்படி, சில்லரை வியாபாரிகள் அதிகபட்சமாக தங்களிடம் 2 டன் வரை வெங்காயத்தை இருப்பு வைத்துக் கொள்ளலாம். மொத்த வியாபாரிகள் அதிகபட்சமாக 25 டன் வரை இருப்பு வைக்கலாம். இந்த தகவலை மத்திய நுகர்வோர் விவகாரங்கள்துறை செயலாளர் லீனா நந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.

இதை மீறினால், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திருத்த சட்டம் கடந்த மாதம்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே அந்த துறையின் மந்திரி பியூஷ் கோயல் இந்த நடவடிக்கை பற்றி ‘டுவிட்டர்’ பக்கத்தில், “அதிகரித்து வரும் வெங்காய விலையை கட்டுப்படுத்தவும், பதுக்கலை தடுக்கவும் மோடி அரசு 3-வது கட்டமாக நடவடிக்கை எடுத்து, சில்லரை வியாபாரிகள் 2 டன் வெங்காயம் வைத்துக் கொள்ளவும், மொத்த வியாபாரிகள் 25 டன் வைத்துக் கொள்ளவும் வரம்பு நிர்ணயித்து உள்ளது” என்று பதிவிட்டு உள்ளார்.


Next Story