‘உலகளவில் சூரிய மின்சக்தி உற்பத்தியில் 5-வது இடத்தில் இந்தியா’ குஜராத்தில் 3 திட்டங்களை தொடங்கி வைத்து மோடி பேச்சு


‘உலகளவில் சூரிய மின்சக்தி உற்பத்தியில் 5-வது இடத்தில் இந்தியா’ குஜராத்தில் 3 திட்டங்களை தொடங்கி வைத்து மோடி பேச்சு
x
தினத்தந்தி 24 Oct 2020 11:30 PM GMT (Updated: 2020-10-25T02:59:50+05:30)

சூரிய மின்சக்தி உற்பத்தியில் உலகிலேயே இந்தியா, 5-வது இடத்துக்கு வந்துள்ளதாக குஜராத்தில் 3 திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் விவசாயிகளுக்கு நீர்ப்பாசனத்துக்கு உதவவும், விவசாய நோக்கங்களுக்காகவும் பகல் நேரத்திலும் மின்சாரம் வழங்கும் ‘கிசான் சூரியோதயா யோஜனா’ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆமதாபாத்தில் யு.என்.மேத்தா இதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் குழந்தைகள் இதய ஆஸ்பத்திரி, மாநில சுகாதார துறையினால் ரூ.470 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜூனகத் நகரத்தின் அருகே கிர்னார் மலையில் இருந்து 2.3 கி.மீ. தொலைவுக்கு ‘ரோப்வே’ (கயிறு பாதை திட்டம்) உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆசியாவின் மிக நீளமான கோவில் ‘ரோப்வே’ ஆகும்.

இந்த 3 திட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்தவாறு நேற்று காணொலி காட்சி வழியாக தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது.

குஜராத்தின் வளர்ச்சிக்கான 3 முக்கிய திட்டங்கள் இன்று மாதா அம்பேவின் அருளாசிகளுடன் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது தொடக்கம்தான். இன்று சூரியோதய யோஜனா திட்டத்தையும், கிர்னார் ரோப்வே திட்டத்தையும், நவீன இதய ஆஸ்பத்திரியையும் பெற்றிருக்கிறீர்கள். இது குஜராத்தின் வலிமை, பக்தி மற்றும் ஆரோக்கியத்தின் அடையாளம் ஆகும்.

குஜராத் எப்போதுமே அசாதாதாரண திறன்களைக் கொண்ட மக்களின் நிலமாக இருந்து வருகிறது. குஜராத்தின் பூஜ்ய பாபு, சர்தார் வல்லபாய் படேல் ஆகியோர் சமூக, பொருளாதார தலைமையை நாட்டுக்கு தந்துள்ளனர்.

குஜராத்தில் விவசாயிகளின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, கிசான் சூர்யோதயா யோஜனா திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குஜராத்தில் நிறைய மின்வெட்டு இருந்த காலம் உண்டு. 24 மணி நேரம் மின்சாரம் வழங்குவது சவாலாக இருந்தது. குழந்தைகளின் படிப்பு, விவசாயிகளின் பாசனம், தொழிற்சாலைகளின் வருமானம் எல்லாமே பாதிக்கப்பட்டது. இப்போது அந்த நிலை மாறி இருக்கிறது.

10 ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய மின்சக்திக்கான விரிவான கொள்கையை கொண்ட நாட்டின் முதல் மாநிலமாக குஜராத் ஆனது. 2010-ம் ஆண்டு, படானில் சூரிய மின்சக்தி ஆலை தொடங்கப்பட்டபோது, ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்கட்டமைப்பு என்ற பாதையை உலகுக்கு இந்தியா காட்டும் என்று யாரும் கற்பனை கூட செய்து பார்த்தது இல்லை.

இன்றைக்கு இந்தியா சூரிய மின்சக்தி உற்பத்தி, பயன்பாட்டில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் சூரிய மின்சக்தி உற்பத்தியில் உலகின் 5-வது இடத்துக்கு இந்தியா வந்துள்ளது. வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.

கிசான் சூரியோதயா யோஜனா, விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு, அவர்களின் வாழ்விலும் புதிய விடியலை கொண்டு வரும்.

விவசாயிகள் தண்ணீரை சேமித்து, ஒரு துளிர் நீர், அதிக பயிர் என்பதை தாரக மந்திரமாக கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story