இந்தியா- அமெரிக்கா இடையேயான 2+2 பேச்சுவார்த்தை தொடங்கியது
இந்தியா- அமெரிக்கா இடையேயான 2+2 பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி,
அமெரிக்கா-இந்தியா இடையேயான உறவு மற்றும் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் இரு நாட்டு வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரிகள் இடையேயான இரண்டுக்கு இரண்டு (‘2 பிளஸ் 2’) பேச்சுவார்த்தை ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ‘2 பிளஸ் 2’ பேச்சுவார்த்தை இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி மார்க் எஸ்பர் ஆகியோர் நேற்று டெல்லி வந்தடைந்தனர்.
அவர்களுக்கு ராணுவ முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோருடன் அமெரிக்க மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு, ராணுவ தகவல் பகிர்வு, ராணுவ தொடர்புகள் மற்றும் பாதுகாப்பு வர்த்தகம் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும் லடாக்கில் சீனாவுடனான எல்லை பதற்றம், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் போன்ற அம்சங்களும் பேச்சுவார்த்தையில் இடம் பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த சாட்டிலைட் தரவுகளை பங்கிடுவது குறித்த ஒப்பந்தம், ராணுவ தளவாட ஒப்பந்தம் உள்ளிட்டவை இந்த சந்திப்பில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story