முப்தி, பரூக் அப்துல்லா இந்தியாவில் வாழ உரிமை இல்லாதவர்கள்; மத்திய மந்திரி ஆவேசம்


முப்தி, பரூக் அப்துல்லா இந்தியாவில் வாழ உரிமை இல்லாதவர்கள்; மத்திய மந்திரி ஆவேசம்
x
தினத்தந்தி 27 Oct 2020 5:33 PM GMT (Updated: 27 Oct 2020 5:33 PM GMT)

சீனா உதவியுடன் செயல்படுவோம் என கூறிய மெஹ்பூபா முப்தி மற்றும் பரூக் அப்துல்லா இந்தியாவில் வாழ உரிமை இல்லாதவர்கள் என்று மத்திய மந்திரி ஆவேசமுடன் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ரத்து செய்தது. அப்போது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 புதிய யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.

ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரிகளான மெஹ்பூபா முப்தி மற்றும் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, மெஹ்பூபா முப்தி மற்றும் பரூக் அப்துல்லா இருவரும் இந்தியாவில் வாழ உரிமை இல்லாதவர்கள்.  அவர்களில் ஒருவர் சீனாவின் உதவியுடன் 370வது பிரிவை நாங்கள் மீண்டும் கொண்டு வருவோம் என கூறுகிறார்.

சீனா நம் மீது தாக்குதல் நடத்த முயற்சித்து கொண்டிருக்கிறது.  இந்த சூழலில் இதுபோன்ற பேச்சுகளை வெளியிடும் இவர்கள் சர்வதேச சமூகத்திற்கு என்ன செய்தியை கூற வருகிறார்கள்? என ஆவேசமுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story