கர்நாடகத்தில் நாளை முதல் மீண்டும் மழை பெய்யும் - இயற்கை பேரிடர் மைய முன்னாள் இயக்குனர் தகவல்


கர்நாடகத்தில் நாளை முதல் மீண்டும் மழை பெய்யும் - இயற்கை பேரிடர் மைய முன்னாள் இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 28 Oct 2020 3:20 AM GMT (Updated: 28 Oct 2020 3:20 AM GMT)

கர்நாடகத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் மீண்டும் மழை பெய்யும் என்று இயற்கை பேரிடர் மைய முன்னாள் இயக்குனர் கூறியுள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கடந்த 15-ந் தேதிக்கு பிறகு கனமழை பெய்தது. குறிப்பாக வட கர்நாடகத்தில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் அங்கு ஓடும் கிருஷ்ணா மற்றும் பீமா ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆற்று படுகையில் உள்ள கிராமங்களுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 247 கிராமங்களை சேர்ந்த 43 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். 38 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அங்கு மழை நின்றுவிட்டது. வெள்ளம் வடிந்துவிட்டது. இதனால் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதற்கிடையே தலைநகர் பெங்களூருவில் கடந்த 23-ந் தேதி இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஒசகெரேஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஆறு போல் ஓடியது.

கடந்த 3 நாட்களாக நகரில் மழை பெய்யவில்லை. தென்மேற்கு பருவமழை நேற்றுடன் நிறைவடைந்துவிட்டது. அதே நேரத்தில் வடகிழக்கு பருவமழை இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. 

இதுகுறித்து கர்நாடக இயற்கை பேரிடர் மைய முன்னாள் இயக்குனர் சீனிவாசரெட்டி கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருப்பதாலும், அரபிக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் கர்நாடகத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால் பெரிய அளவில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு குறைவு தான். சமீபத்தில் வட கர்நாடகத்தில் பெய்த மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பெரிதும் துன்பத்தை அனுபவித்தனர்.

இவ்வாறு சீனிவாசரெட்டி கூறினார்.

Next Story