இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 90.85 சதவீதமாக உயர்வு


இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 90.85 சதவீதமாக உயர்வு
x
தினத்தந்தி 28 Oct 2020 11:34 AM IST (Updated: 28 Oct 2020 11:34 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 90.85 சதவீதமாக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

உலகில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருந்து நிலையில், நாடு முழுவதும் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை கணிசாக உயர்ந்து வருவதுடன், உயிரிழப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 90.85 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43 ஆயிரத்து 893 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 79 லட்சத்து 90 ஆயிரத்து 322 ஆக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 58,439 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 72,59,509 ஆக உயர்ந்துள்ளது. இதனால் குணமடைந்தோர் விகிதம் 90.85 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 லட்சத்து 10 ஆயிரத்து 803 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7.64 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து 6-வது நாளாக கொரோனா வைரஸால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. கொரோனா பலி விகிதம் 1.50 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 508 பேர் உயிரிழந்தனர். அதில் மராட்டியத்தில் 115 பேரும், கர்நாடகாவில் 44 பேரும், டெல்லியில் 44 பேரும், மேற்கு வங்கத்தில் 58 பேரும், தமிழகத்தில் 27 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 27 உயிரிழந்தனர்.

இந்தியா முழுவதும் மொத்தம் கொரோனா உயிரிழப்புகளில் மராட்டியத்தில் 43,463 பேரும், கர்நாடகாவில் 10,991 பேரும், தமிழ்நாட்டில் 10,983 பேரும் உ.பி.இல் 6,940 பேரும், ஆந்திராவில் 6,965 பேரும், மேற்கு வங்கத்தில் 6,604 பேரும், டெல்லியில் 6,356 பேரும், பஞ்சாபில் 4.138 பேரும், குஜராத்தில் 3,695 பேரும் பலியாகியுள்ளனர்.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story