குஜராத் முன்னாள் முதல்-மந்திரி கேசுபாய் படேல் மரணம்: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்


குஜராத் முன்னாள் முதல்-மந்திரி கேசுபாய் படேல் மரணம்:  ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
x
தினத்தந்தி 30 Oct 2020 1:46 AM IST (Updated: 30 Oct 2020 1:46 AM IST)
t-max-icont-min-icon

குஜராத் முன்னாள் முதல்-மந்திரி கேசுபாய் படேல் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

குஜராத் மாநிலத்தில் 1995 மற்றும் 1998-2001 ஆண்டுகளில் முதல்-மந்திரி பதவி வகித்தவர் கேசுபாய் படேல் (வயது 92). இவரைத் தொடர்ந்து அங்கு முதல்-மந்திரி பதவிக்கு வந்தவர்தான் பிரதமர் நரேந்திர மோடி.

கேசுபாய் படேல், நீண்ட காலமாக வயோதிகத்தாலும், உடல்நலக்குறைவாலும் அவதிப்பட்டு வந்தார். கொரோனா வைரஸ் தொற்று பாதித்து அதில் இருந்து மீண்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை நேற்று மோசமானது. உடனடியாக ஆமதாபாத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்ட நிலையில், அவர் மரணம் அடைந்தார்.

கேசுபாய் படேல், 2012-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இருந்து விலகினார். குஜராத் பரிவர்த்தன் கட்சியை தொடங்கினார். 2012 சட்டசபை தேர்தலில் அந்த கட்சி தோல்வி கண்டதைத் தொடர்ந்து 2014-ல் பா.ஜ.க. வுடன் இணைத்து விட்டார்.

அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில், “நமது அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தலைவர் கேசுபாய் படேல் காலமானார். நான் மிகுந்த வேதனையும், வருத்தமும் அடைந்துள்ளேன். அவர் சமூகத்தின் அனைத்து பிரிவையும் கவனித்துக்கொண்ட சிறந்த தலைவராக விளங்கினார். அவரது வாழ்க்கை குஜராத்தின் முன்னேற்றத்துக்காகவும், ஒவ்வொரு குஜராத்திக்கும் அதிகாரம் வழங்கவும் அர்ப்பணிக்கப்பட்டதாகும்” என கூறி உள்ளார்.

Next Story