நள்ளிரவிலும் தண்டவாளத்தில் அமர்ந்து குஜ்ஜார் சமூகத்தினர் போராட்டம்
ராஜஸ்தானில் இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து குஜ்ஜார் சமூகத்தினர் நள்ளிரவிலும் ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெய்ப்பூர்,
மேய்ச்சல் மற்றும் விவசாய தொழிலை பிரதானமாகக் கொண்ட குஜ்ஜார் சமூகத்தினர் பல லட்சம் பேர் ராஜஸ்தானில் வசித்து வருகின்றனர்.
தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அங்கீகரித்து கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கேட்டு கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் போராடி வருகின்றனர்.
கடந்த ஆண்டு அவர்கள் நடத்திய போராட்டங்களால் ராஜஸ்தான் மாநிலமே ஸ்தம்பித்துப் போனது. இந்த நிலையில் தேசிய பாதுகாப்புச் சட்டம் அமலில் உள்ள பரத்பூர் அருகே ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து குஜ்ஜார் மக்கள் மீண்டும் தங்களது போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
அம்மாநில விளையாட்டுத் துறை மந்திரி அஷோக் சந்தனா தங்களை வந்து சந்தித்து குறைகளை கேட்க வேண்டும் என அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்து அவர்கள் நள்ளிரவில் ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தானின் குஜ்ஜார் சமூகத்தின் தலைவர் விஜய் பெயின்ஸ்லா கூறுகையில்,
எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை எங்கள் போராட்டத்தைத் தொடர்வோம், அது தொடர்பான உத்தரவு அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
ராஜஸ்தானில் குஜ்ஜார் போராட்டத்தால் ஏழு ரெயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story