பீகார் சட்டசபை 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது 94 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு


பீகார் சட்டசபை 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது 94 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 2 Nov 2020 5:25 AM IST (Updated: 2 Nov 2020 5:25 AM IST)
t-max-icont-min-icon

பீகார் சட்டசபை 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது. நாளை 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.

பாட்னா, 

பீகாரில் நடந்து வரும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி முடிவடைவதால், அம்மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

முதல் கட்ட தேர்தல், கடந்த 28-ந் தேதி நடந்தது. 2-ம் கட்ட தேர்தல், நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி, கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வந்த பிரசாரம் நேற்று மாலை முடிவடைந்தது.

17 மாவட்டங்களில் அடங்கி உள்ள 94 சட்டசபை தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

இந்த தொகுதிகளில் 2 கோடியே 85 லட்சத்து 50 ஆயிரத்து 285 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 1 கோடியே 50 லட்சத்து 33 ஆயிரத்து 34 பேர். பெண்கள் 1 கோடியே 35 லட்சத்து 16 ஆயிரத்து 271 பேர். திருநங்கையர் 980 பேர்.

41 ஆயிரத்து 362 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1,463 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 1,316 பேர் ஆண்கள், 146 பேர் பெண்கள் ஆவர்.

மகராஜ்கஞ்ச் தொகுதியில் அதிகபட்சமாக 27 வேட்பாளர்களும், தராலி (தனி) தொகுதியில் குறைந்தபட்சமாக 4 வேட்பாளர்களும் உள்ளனர்.

ராஷ்டிரீய ஜனதாதளத்தின் முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், அவருடைய அண்ணன் தேஜ்பிரதாப் யாதவ், சத்ருகன் சின்காவின் மகன் லவ் சின்கா ஆகியோர் 2-ம் கட்ட தேர்தலை சந்திப்பவர்களில் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் சொந்த கிராமம் அமைந்துள்ள ஹரானட் தொகுதியிலும் தேர்தல் நடக்கிறது.

தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று பிரதமர் மோடி 4 பிரசார கூட்டங்களில் பங்கேற்று பேசினார். நேற்று முன்தினம் 3 கூட்டங்களில் பேசினார்.

மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், ஸ்மிருதி இரானி, கிரிராஜ்சிங், அனுராக் தாக்குர், பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

முதல்-மந்திரி நிதிஷ்குமாரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, 2-ம் கட்ட தேர்தலுக்காக 2 கூட்டங்களில் பேசினார். தேஜஸ்வி யாதவ், கடந்த 28-ந் தேதியில் இருந்து தினமும் 10-க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பேசி வருகிறார்.

கூட்டங்களில், பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு நெருக்கமாக பங்கேற்பதை பார்க்க முடிந்தது.

பீகாரில், 3-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் 7-ந் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 10-ந் தேதி நடக்கிறது.

Next Story