அசாம் ஜே.இ.இ. நுழைவு தேர்வு மோசடி; முக்கிய புள்ளி கைது


அசாம் ஜே.இ.இ. நுழைவு தேர்வு மோசடி; முக்கிய புள்ளி கைது
x
தினத்தந்தி 2 Nov 2020 10:48 AM IST (Updated: 2 Nov 2020 10:48 AM IST)
t-max-icont-min-icon

அசாம் ஜே.இ.இ. நுழைவு தேர்வில் மோசடி செய்து மாநிலத்தில் முதல் இடம் பிடித்த வழக்கில் முக்கிய புள்ளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கவுகாத்தி,

அசாமில் ஜே.இ.இ. நுழைவு தேர்வு (மெயின்) கடந்த செப்டம்பர் 5ந்தேதி நடந்தது.  இதில் தேர்வெழுதியவர்களில் நீல் நட்சத்திர தாஸ் என்ற மாணவர் 99.8 சதவீத மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதல் இடம் பெற்றார் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், நீல் தனது நண்பரிடம் தேர்வெழுத தான் செல்லவில்லை என்றும் வேறொரு நபரை வைத்து தேர்வெழுதி வெற்றி பெற்றேன் என்றும் தொலைபேசி வழியே பேசியுள்ளார்.  இந்த உரையாடல் வெளிவந்து வைரலானது.  இதனை தொடர்ந்து கவுகாத்தி போலீஸ் உயரதிகாரிகள் நடந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்டனர்.  அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

கடந்த அக்டோபர் 23ந்தேதி மித்ரதேவ் சர்மா என்பவர் போலீசில் அளித்த புகாரின்பேரில் பதிவான எப்.ஐ.ஆரில், மாணவர் நீலின் பெற்றோர் இருவரும் மருத்துவர்கள்.  அவர்கள் கவுகாத்தியில் உள்ள தனியார் பயிற்சி மையத்திற்கு ரூ.20 லட்சம் வரை பணம் கொடுத்து தங்களது மகன் தேர்வெழுத உதவும்படி கேட்டுள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

இந்த வழக்கில், மாணவர் நீல், அவரது தந்தை ஜோதிர்மொய் தாஸ் மற்றும் அவர்களது 3 கூட்டாளிகளான ஹேமேந்திர நாத் சர்மா, பிரஞ்சால் கலீடா மற்றும் ஹிருகமல் பதக் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.  இவர்களில் இருவர் டி.சி.எஸ். ஊழியர்கள்.  மற்றொருவர் தேர்வு கண்காணிப்பாளர் ஆவார்.

இந்நிலையில், வழக்கின் முக்கிய புள்ளியான கவுகாத்தி நகர தனியார் பயிற்சி மைய உரிமையாளரான பார்கவ் தேகா என்பவரை கோபிநாத் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.  இதனால், தேர்வில் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட வேறு ஏதேனும் முறைகேடுகள் நடந்தனவா? என்பது பற்றி போலீசார் விசாரணையில் தெரிய வரும்.

Next Story