டியூசன் படிக்க வந்த மாணவர்களுக்கு அதிர்ச்சி; ஒரே குடும்பத்தில் 5 பேர் தூக்கு போட்டு தற்கொலை


டியூசன் படிக்க வந்த மாணவர்களுக்கு அதிர்ச்சி; ஒரே குடும்பத்தில் 5 பேர் தூக்கு போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 3 Nov 2020 10:26 AM IST (Updated: 3 Nov 2020 10:26 AM IST)
t-max-icont-min-icon

அசாமில் மாணவர்கள் டியூசன் படிக்க வந்த இடத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சி அடைந்தனர்.

கோக்ரஜார்,

அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தில் கொசைகாவன் பகுதியில் வசித்து வந்தவர் நிர்மல் பால் (வயது 52).  இவரது மனைவி மாலிகா பால் (வயது 45).  இந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர்.  நிர்மல் கியாஸ் ஏஜென்சி தொழில் செய்து வந்துள்ளார்.

இதுதவிர மாணவர்களுக்கு டியூசன் எடுத்தும் வந்துள்ளனர்.  இந்த நிலையில், டியூசன் படிக்கும் மாணவர்கள் இவர்களது வீட்டுக்கு வந்து மணிக்கணக்கில் கதவை தட்டியுள்ளனர்.  ஆனால் நீண்ட நேரம் எந்த பதிலும் வரவில்லை.

இதுபற்றி அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் கூறியுள்ளனர்.  அவர்கள் வந்து பார்த்தபொழுது, 5 பேரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரிய வந்தது.  இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்து உள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 5 பேரின் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  அந்த குடும்பத்தினர் சிலரிடம் கடன் வாங்கியுள்ளனர் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதில் கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவர்கள் அனைவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் விவகாரங்கள் உள்ளனவா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story