இரு அவைகளையும் சேர்த்து காங்கிரசுக்கு 100 உறுப்பினர்கள் கிடையாது- பிரதமர் மோடி கிண்டல்
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மக்கள் காங்கிரசை தண்டிக்கின்றனர் என்று பிரதமர் மோடி கூறினார்.
பாட்னா,
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் அக்டோபர் 28 நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் இன்று (நவம்பர் 3) நடைபெற்று வருகிறது. மேலும், இறுதிகட்ட தேர்தல் நவம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் முதல்மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா இணைந்த கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியை எதிர்த்து ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி இணைந்த மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.இதேபோல் ஆளும் என்டிஏ கூட்டணியில் இருந்து பிரிந்த லோக் ஜனசக்தி கட்சி தனித்து போட்டியிடுகிறது. ஆனாலும் பாஜகவுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கிறது.
இதற்கிடையில், 3-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு நட்சத்திர பேச்சாளர்களும் தங்கள் கூட்டணிக்கு ஆதரவாக வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பீகாரின் சஜர்சா பகுதியில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது;-
மக்கள் காங்கிரசை எந்த நிலைமையில் வைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள். மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளையும் சேர்த்து காங்கிரஸ் கட்சிக்கு இன்று 100 பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட கிடையாது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மக்கள் காங்கிரசை தண்டிக்கின்றனர்.
நீங்கள் பாரத மாதாவுக்கு ஜே அல்லது ஜெய் ஸ்ரீ ராம் என நீங்கள் கூறுவதை குறிப்பிட்ட சிலர் விரும்பவில்லை. அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வந்து பீகார் மக்களிடம் வாக்கு கேட்கின்றனர். அவ்வாறானவர்களுக்கு பீகார் தேர்தலில் உரிய பதிலடி கொடுக்க அவசியம் ஏற்பட்டுள்ளது. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை மீண்டும் அமைக்க மக்கள் முடிவெடுத்துள்ளனர்' என்றார்.
Related Tags :
Next Story