கர்நாடகத்தில் பலத்த மழை எதிரொலி: தமிழகத்திற்கு 160 டி.எம்.சி. காவிரி நீர் திறப்பு
கர்நாடகத்தில் பலத்த மழை பெய்ததன் எதிரொலியாக கடந்த ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தமிழகத்திற்கு 160 டி.எம்.சி. நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
பெங்களூரு,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் ஆண்டுதோறும் 177 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) கர்நாடகம் திறந்துவிட வேண்டும். அதன்படி கடந்த ஜூன் மாதம் முதல் கடந்த அக்டோபர் மாதம் வரை தமிழகத்திற்கு 143.82 டி.எம்.சி. காவிரி நீர் கர்நாடகம் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் கடந்த 1-ந் தேதி வரை தமிழகத்திற்கு கர்நாடகத்தில் இருந்து 160 டி.எம்.சி. நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் காவிரி ஆறு நுழைவு பகுதியான பிலிகுண்டுலுவில் உள்ள நீர் அளவீட்டு மையத்தில் இது பதிவாகியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த அக்டோபர் வரை விட வேண்டிய நீரை விட கூடுதலாக 17 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்துவிட்டுள்ளது. நடப்பு நவம்பர் மாதத்தில் 13.76 டி.எம்.சி. நீர் தமிழகத்திற்கு கர்நாடகம் வழங்க வேண்டும். ஆனால் அது கடந்த மாதமே திறந்து விடப்பட்டுள்ளதால், கர்நாடக அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை என்று கூறப்படுகிறது. தற்போது காவிரி படுகை பகுதிகளில் மழை குறைந்துவிட்டது. ஆயினும் வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வரை நீர் தமிழகத்திற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.
தற்போது முதல் அடுத்த ஆண்டு (2021) மே மாதம் வரை 17 டி.எம்.சி. நீர் கர்நாடகம் வழங்க வேண்டும். தொடர்ந்து லேசான மழை பெய்து வருவதால், இந்த நீரை திறந்து விடுவதில் கர்நாடகத்திற்கு எந்த பிரச்சினையும் இருக்காது என்றே சொல்லப்படுகிறது. இந்த முறை வருணபகவானின் கருணையால், கர்நாடகம்-தமிழகம் இடையே இந்த ஆண்டு நீர் பங்கீடு பிரச்சினை எழாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கூறுகையில், “காவிரி படுகையில் அதிக மழை பெய்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி அக்டோபர் வரைக்கும் தமிழ்நாட்டிற்கு 143.46 டி.எம்.சி. நீர் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும். ஆனால் நல்ல மழை பெய்த காரணத்தால் தமிழகத்திற்கு இதுவரை 160 டி.எம்.சி. நீர் திறந்துவிட்டுள்ளோம்“ என்றார்.
Related Tags :
Next Story