தீபாவளி பண்டிகையை யொட்டி மும்பை- சென்னை இடையே சிறப்பு ரெயில்கள்


தீபாவளி பண்டிகையை யொட்டி மும்பை- சென்னை இடையே சிறப்பு ரெயில்கள்
x
தினத்தந்தி 6 Nov 2020 8:55 AM (Updated: 6 Nov 2020 8:55 AM)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி மும்பை லோக்மான்ய திலக் டெர்மினல் -சென்னை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு இன்று தொடக்கப்பட உள்ளது.

மும்பை, 

கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு மும்பையில் இருந்து தமிழகத்திற்கு செல்லும் ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஊரடங்கு தளர்வு காரணமாக படிப்படியாக தொலைதூர ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இ்ந்தநிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்திற்கு செல்லும் ஜாம்நகர், காந்திதாமில் இருந்து திருநெல்வேலிக்கு 2 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மத்திய ரெயில்வே தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு இடைக்கால சிறப்பு ரெயில்களை இயக்க முன்வந்து உள்ளது.

இது குறித்து மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

02163 என்ற எண் கொண்ட சிறப்பு ரெயில் குர்லா லோக்மான்ய திலக் டெர்மினலில்(எல்.டி.டி) இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வருகிற 7-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தினசரி 24 சேவைகள் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் மாலை 6.45 மணி அளவில் லோக்மான்ய திலக் டெர்மினிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் மாலை 4.20 மணி அளவில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் சென்றடையும்.

இதேபோல மறுமார்க்கத்தில் 02164 என்ற எண் கொண்ட சிறப்பு ரெயில் சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 8-ந் தேதி முதல் அடுத்தமாதம் 1-ந் தேதி வரை தினசரி 24 சேவைகள் இயக்கப்பட உள்ளது.

இந்த ரெயில் சென்னை சென்டிரலில் இருந்து மாலை 6.15 மணி அளவில் புறப்பட்டு மறுநாள் மாலை 4 மணி அளவில் லோக்மான்ய திலக் டெர்மினல் வந்தடையும்.

இந்த சிறப்பு ரெயில்கள் தானே, கல்யாண், புனே, சோலாப்பூர், கல்புர்கி, வாடி, யாத்கீர், சைதாபூர், ராய்ச்சூர், மந்திராலாயம் ரோடு, அதோனி, குண்டக்கல், கூட்டி, தாடிபத்ரி, யரகுண்டலா, கடப்பா, ரசாம்பேட், ரேணிகுண்டா, அரக்கோணம் மற்றும் பெரம்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சிறப்பு ரெயிலில் 2 அடுக்கு ஒரு ஏசி பெட்டியும், 3 அடுக்கு 4 ஏசி பெட்டியும், 11 படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் 6 இரண்டாம் நிலை இருக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளது.

இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு டிக்கெட் இன்று(வியாழக்கிழமை) முதல் ஆன்லைனில் பெற்று கொள்ளலாம். மேலும் முன்பதிவு பெற்ற பயணிகள் மட்டும் சிறப்பு ரெயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story