500 ஆண்டுகளுக்கு பின் ராமஜென்ம பூமி பகுதியில் ஏற்றப்படும் 5 லட்சம் மண் விளக்குகள்; உ.பி. மந்திரி தகவல்


500 ஆண்டுகளுக்கு பின் ராமஜென்ம பூமி பகுதியில் ஏற்றப்படும் 5 லட்சம் மண் விளக்குகள்; உ.பி. மந்திரி தகவல்
x
தினத்தந்தி 7 Nov 2020 3:18 PM IST (Updated: 7 Nov 2020 3:18 PM IST)
t-max-icont-min-icon

தீபோற்சவ விழாவை முன்னிட்டு இந்த ஆண்டில் முதன்முறையாக 500 ஆண்டுகளுக்கு பின் ராமஜென்ம பூமி பகுதியில் 5 லட்சம் மண் விளக்குகள் ஏற்றப்பட உள்ளன.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக இருந்து வந்த நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அங்கு ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து அமைக்கப்பட்ட ராமஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவிலை கட்டுவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு உள்ளது.

இதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள புண்ணிய தலங்களில் இருந்து மண்ணும், புனித நீரும் கொண்டு வரப்படுகிறது.

அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் பிரமாண்டமாக கட்டப்படும் ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி கடந்த ஆகஸ்டு 5ந்தேதி அடிக்கல் நாட்டினார்.

ராமரை கம்போடியா, மலேசியா, தாய்லாந்து, இலங்கை, நேபாளம், லவோஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் வணங்குகிறார்கள். ஈரான், சீனா போன்ற நாடுகளிலும் ராமர் கதை உள்ளது. உலகிலேயே முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இந்தோனேசியாவிலும் ராமாயணம் உள்ளது. பல்வேறு மொழிகளிலும் ராமாயணம் எழுதப்பட்டு இருக்கிறது. தமிழில் கம்பர் எழுதியுள்ள ராமாயணம், ராமரின் புகழை பறைசாற்றுவதாக அமைந்து உள்ளது.  இந்நிலையில், பல ஆண்டுகளாக கூடாரத்தின் கீழ் இருக்கும் குழந்தை ராமருக்கு பிரமாண்டமான கோவில் கட்டப்படுகிறது.

இந்த நிலையில், உத்தர பிரதேச சுற்றுலா மந்திரி நீல்காந்த் திவாரி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, 500 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின்னர் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு இறுதியாக அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.

கொரோனா பாதிப்புகள் இல்லையெனில் தீபோற்சவத்தில் கோடிக்கணக்கானோர் கலந்து கொண்டு இருக்க கூடும்.  ஆனால், மக்கள் யாரும் அதிக அளவில் இங்கு வந்து கூட வேண்டாம் என நாங்கள் கேட்டு கொள்கிறோம்.  நீங்கள் லைவாக நிகழ்ச்சியை தொலைக்காட்சி வழியே கண்டு களியுங்கள்.

இந்த தீபோற்சவத்தில் இந்த ஆண்டில் 5 லட்சம் மண் விளக்குகள் ஏற்றப்பட உள்ளன.  ராமஜென்ம பூமி பகுதியில் கடந்த 500 ஆண்டுகளாக நடைபெறாமல் நிலுவையில் இருந்த இந்த நிகழ்ச்சி முதன்முறையாக நடைபெறவுள்ளது என கூறியுள்ளார்.

Next Story