ஹஜ் புனித பயணத்துக்கு கொரோனா பரிசோதனை சான்று கட்டாயம்- மத்திய மந்திரி தகவல்
ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.
மும்பை,
சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள புனித தலத்துக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த ஆண்டு (2021) புனித பயண ஏற்பாடுகள் குறித்த ஹஜ் கமிட்டி கூட்டம் நேற்று மும்பையில் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையில் நடந்தது.
கூட்டத்துக்கு பிறகு முக்தார் அப்பாஸ் நக்வி நிருபர்களிடம் கூறியதாவது:-
2021-ம் ஆண்டு மெக்கா புனித பயணத்துக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந் தேதி கடைசி நாள். விண்ணங்களை ஆன்லைன் அல்லது ஹஜ் மொபைல் அப்ளிகேசன் மூலம் செய்யலாம். புனித பயணத்துக்கு செல்பவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற ஆர்.டி- பி.சி.ஆர் சான்று கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் விமான பயணத்துக்கு 72 மணி நேர முந்தைய சான்றை தாக்கல் செய்ய வேண்டும். புனித பயணத்துக்காக கடந்த தடவை நாடு முழுவதும் 21 இடங்களில் இருந்து விமானம் புறப்பட்டு சென்றது. ஆனால் இந்த தடவை அவை 10 இடங்களாக குறைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி ஆமதாபாத், பெங்களூரு, கொச்சி, டெல்லி, கவுகாத்தி, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் இருந்து விமானங்கள் புறப்படும். கொரோனா சூழ்நிலை, ஏர் இந்திய உள்ளிட்ட ஏஜென்சிகளின் கருத்துக்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. 2020-ம் ஆண்டுக்காக ஆண் துணையின்றி பயணிக்க தாக்கல் செய்த பெண்களின் விண்ணப்பங்கள் 2021-ம் ஆண்டுக்கும் செல்லுபடியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story