புதுச்சேரியில் கனமழை காரணமாக சட்டப்பேரவை கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது


புதுச்சேரியில் கனமழை காரணமாக சட்டப்பேரவை கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 8 Nov 2020 11:48 AM IST (Updated: 8 Nov 2020 11:48 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் கனமழை காரணமாக சட்டப்பேரவை கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 4 கார்கள் சேதம் அடைந்தது.

புதுச்சேரி,

புதுவை கடற்கரைச் சாலை பாரதி பூங்கா அருகில் பிரெஞ்சு ஆட்சியர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் புதுவை சட்டப்பேரவை செயல்பட்டு வருகிறது. சட்டப்பேரவை மைய மண்டபம் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கட்டிடமாகும். அதனைச் சுற்றி புதிதாகக் கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மைய மண்டபம் செயல்படும் கட்டிடத்திற்குப் பின்புறம் கடந்த 2006ஆம் ஆண்டு 3 தளங்கள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டுத் திறக்கப்பட்டது.

இந்தக் கட்டிடத்தின் கீழ் தளத்தில் சட்டப்பேரவைக்குப் பின்புறம் நுழைவுவாயிலும், முதல் தளத்தில் சட்டப்பேரவைச் செயலாளர் அலுவலகமும், 2-வது தளத்தில் அமைச்சரவை அலுவலகமும், 3-வது தளத்தில் பொதுப்பணித்துறை மந்திரி நமச்சிவாயத்தின் அலுவலகமும் கருத்தரங்க அறையும் உள்ளது. அதன் மேல் உள்ள மாடியில் குடிநீர் தொட்டிகள் பில்லர் அமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களாக தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அதன்படி, நேற்றைய தினமும் இரவு இடியுடன் கூடிய கன் மழை பெய்தது. அப்போது, கடுமையாக இடி இடித்தது. இதில் சட்டப்பேரவை மைய மண்டபம் பின்புறம் உள்ள கட்டிடத்தின் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ள இடத்தில் இடி தாக்கியது.

இதனால் அந்தச் சுவர் சேதமடைந்து சரிந்து விழுந்தது. இதில் தரைத்தளத்தில் சபாநாயகர் அலுவலகம் மற்றும் சட்டப்பேரவைச் செயலாளர் அலுவலகம் பயன்படுத்தும் கார்கள் மீது இடிந்த சுவரின் சில பகுதிகள் விழுந்தன. இதனால் அங்கிருந்த 4 கார்கள் சேதமடைந்தன.

இதுகுறித்துத் தகவல் அறிந்த முதல்-மந்திரி நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து சட்டப்பேரவைச் செயலாளர் முனுசாமி மற்றும் அதிகாரிகள் இன்று காலை வந்து பார்வையிட்டனர்.

Next Story