டெல்லியில் கொரோனா தொற்று பரவல் விரைவில் குறையும் - சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின்
டெல்லியில் கொரோனா தொற்று பரவல் விரைவில் குறையும் என்று அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால், சில மாநிலங்களில் மட்டும் தொற்று பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக டெல்லியில் கடந்த சில தினங்களாக தினம் தினம் கொரோனா தொற்று உச்சம் தொட்டு வருகிறது.
தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. டெல்லியில் நேற்று ஒருநாளில் மட்டும் 6,953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,784 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் கொரோனா தொற்று பரவல் விரைவில் குறையும் என்று டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லி சுகாதாரத்துறை மந்திரி கூறியதாவது:-
''டெல்லியில் மூன்றாவது முறையாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று விரைவில் குறையும். அதற்கான முயற்சியாக அரசு சார்பில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்படுகின்றன.
அரசு மருத்துவமனைகளில் போதிய அளவு கொரோனா மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் உள்ளன. தளர்வுகள் மற்றும் பண்டிகை காலத்தையொட்டி சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதே தொற்று பரவக் காரணமாக உள்ளது. மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
கடைவீதிகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்ற கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு கடைபிடித்தால் கொரோனா தொற்று பரவலை குறைக்க முடியும்.
இவ்வாறு சுகாதாரத்துறை மந்திரி கூறினார்.
Related Tags :
Next Story