ஆட்சியை பிடிக்கப்போவது யார்? பீகாரில் நாளை ஓட்டு எண்ணிக்கை
3 அடுக்கு பாதுகாப்புடன், பீகார் சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்கிறது.
பாட்னா,
பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. கடந்த மாதம் 28-ந் தேதி, கடந்த 3-ந் தேதி, 7-ந் தேதி என 3 கட்டங்களாக நடந்தது. இதையடுத்து, ஓட்டு எண்ணிக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, 55 மையங்களில் நடக்கிறது. மொத்தம் 38 மாவட்டங்கள் இருக்கின்றன. கிழக்கு சாம்பரான், கயா, சிவான், பெகுசாரை ஆகிய 4 மாவட்டங்களில் அதிகபட்சமாக தலா 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் தலா ஒன்றோ, இரண்டோ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஓட்டு எண்ணும் மையங்களில் உள்ள அறைகளில் தலா 7 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். தலைநகர் பாட்னாவில் உள்ள 14 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகளும் ஒரே ஒரு மையத்தில் எண்ணப்படுகிறது. மையங்களில் பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு படையினருக்காக தலா 2 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதலில் துணை ராணுவப்படையும், அடுத்து, பீகார் ராணுவ போலீசும், வெளிவட்டத்தில் மாவட்ட போலீசும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும். துணை ராணுவத்தினர் மட்டும் சுமார் 8 ஆயிரம்பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆட்கள் கூடுவதை தடுப்பதற்காக, ஓட்டு எண்ணும் மையங்களிலும், அதைச்சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காலம் என்பதால், விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கிருமிநாசினி திரவ பாட்டில்கள், போதிய அளவில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுற்று முடிவுகளும் மைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் திரையில் காண்பிக்கப்படும்.
ஓட்டு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி எச்.ஆர்.சீனிவாசா கூறினார். சமூக விரோத சக்திகள், இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.
ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 122 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள், முதல்-மந்திரி நிதிஷ்குமாருக்கு பின்னடைவு ஏற்படும் என்றும், லாலுபிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கின்றன. இருப்பினும், எந்த கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்பது நாளை ஓட்டு எண்ணிக்கையின் முடிவில் தெரிய வரும்.
Related Tags :
Next Story