கொரோனாவுக்கு எதிரான ரஷிய தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை


கொரோனாவுக்கு எதிரான ரஷிய தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 9 Nov 2020 11:45 PM GMT (Updated: 2020-11-10T04:48:06+05:30)

கொரோனாவுக்கு எதிரான ரஷிய தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

புதுடெல்லி, 

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் பணிகளை இந்தியாவின் உள்நாட்டு மருந்து நிறுவனங்களை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் பல தடுப்பூசிகள் பரிசோதனைகளில் உள்ளன. அதேநேரம் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரிக்கவும் பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

அந்தவகையில் ரஷியா உருவாக்கி உள்ள ‘ஸ்புட்னிக் 5’ என்ற தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க ரஷியா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிராக முதன் முதலில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த தடுப்பூசி மனிதர்களிடம் இறுதிக்கட்ட பரிசோதனைகளில் உள்ளது.

பதிவுக்கு பிந்தைய பரிசோதனை நடவடிக்கைகளில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்று இருக்கின்றனர். அத்துடன் வெகுஜன பயன்பாட்டுக்காக மிகப்பெரிய அளவில் தயாரிக்கும் ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

இந்த தடுப்பூசியை இந்தியா, தென்கொரியா, பிரேசில், சவுதி அரேபியா போன்ற நாடுகளிலும் தயாரிக்க ரஷியா திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக இந்தியாவில் மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிக்கவும் ரஷியா முயன்று வருகிறது. அவ்வாறு இந்தியாவில் தயாரிக்கும் பட்சத்தில் இந்த தடுப்பூசி தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கும், இந்திய மருந்து நிறுவனங்களுக்கும் ரஷியா வழங்கும்.

இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் முன்னணி மருந்து நிறுவனங்களிடம் ரஷியா சார்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. இந்த தடுப்பூசியை தயாரிக்க இந்தியாவின் 4 முன்னணி மருந்து நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளன. மேலும் வேறு சில நிறுவனங்களிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதைப்போல இந்த தடுப்பூசியை இந்தியாவில் மனிதர்களிடம் பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இவ்வாறு தடுப்பூசி தயாரிப்பு மற்றும் பரிசோதனைகளுக்கான நடவடிக்கைகள் தொடர்பாக ரஷிய அதிகாரிகளுடன் இந்திய தூதர் வெங்கடேஷ் வர்மா பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்.

இதற்கிடையே ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசியை உலகம் முழுவதும் பிரபலப்படுத்த சமூக வலைத்தளங்களில் பிரசாரம் மேற்கொள்ள ரஷியா திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக பிரத்யேக ஹேஷ்டேக்குகள் உருவாக்கி டுவிட்டர், பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரசாரம் விரைவில் தொடங்கப்படும்.

அதில் இந்த தடுப்பூசியின் தயாரிப்பு, பரிசோதனைகளின் முன்னேற்றம், பல்வேறு நாடுகளில் வெகுஜன தடுப்பூசி திட்டம், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் அனுபவ பகிர்வு, தடுப்பூசி குறித்த முக்கியமான அறிவிப்புகள் உள்ளிட்டவை இடம்பெறுகிறது. மேலும் இந்த தடுப்பூசி குறித்து மருத்துவ நிபுணர்களின் விளக்கம் போன்றவையும் இடம்பெறும் என டெல்லியில் உள்ள ரஷிய தூதரகம் தெரிவித்து உள்ளது.

Next Story