ஆட்சியை பிடிப்பது யார்? பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது
பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது.
பாட்னா,
243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணியும் பிரதானமாக களத்தில் இருந்தன. இதைத்தவிர ராஷ்டிரீய லோக் சமதா கட்சி தலைமையில் மற்றொரு அணியும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்த ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி தனியாகவும் போட்டியிட்டன.
இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. 38 மாவட்டங்களில் 55 இடங்களில் அமைந்துள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் தபால் வாக்குகள் முதலிலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் தொடர்ந்தும் எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலில் கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தன. குறிப்பாக அதிகபட்சமாக 1000 வாக்காளர்களுக்கு ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் என்ற அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு இருந்தது.
கூடுதல் எந்திரங்கள் காரணமாக தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஆகும் என தேர்தல் அதிகாரிகள் கூறினர். வழக்கமாக நண்பகலுக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த தேர்தலில் இறுதி முடிவு தெரிய இரவு வரை ஆகலாம் என அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story