போதை பொருள் வழக்கு; இந்தி திரைப்பட தயாரிப்பாளரின் மனைவி ரூ.15 ஆயிரம் ஜாமீனில் விடுதலை


போதை பொருள் வழக்கு; இந்தி திரைப்பட தயாரிப்பாளரின் மனைவி ரூ.15 ஆயிரம் ஜாமீனில் விடுதலை
x
தினத்தந்தி 10 Nov 2020 7:22 PM IST (Updated: 10 Nov 2020 7:22 PM IST)
t-max-icont-min-icon

போதை பொருள் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் பிரோஸ் நாடியட்வாலாவின் மனைவி ரூ.15 ஆயிரம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

புனே,

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்புடைய வழக்கு விசாரணையை தொடர்ந்து இந்தி திரையுலகிற்கும், போதைப்பொருள் கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் பிரபல நடிகைகள் தீபிகா படுகோனே, ரகுல் பிரீத்சிங், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.

இந்த நடிகைகளின் செல்போன்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்பட்டது. அதன்பின்னர் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்புடைய வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் சோவிக் சக்ரபோர்த்தி மற்றும் சுஷாந்தின் இரண்டு பணியாளர்கள் மற்றும் சிலர் உள்ளிட்டோர் சுஷாந்துக்கு போதை பொருள் வினியோகம் செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  இதுபற்றிய வாட்ஸ்அப் உரையாடல்கள் ரியாவின் போனில் இருந்தன.  அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

நடிகர் சுஷாந்த் மரண வழக்கில் கடந்த மாதம் ஜாமீன் பெற்று ரியா விடுதலையானார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி திடீரென நடிகை தீபிகா படுகோனேவின் மேலாளரான கரிஷ்மா பிரகாசின் மும்பை வெர்சோவாவில் உள்ள வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை போட்டனர். இந்த சோதனையில் 1.8 கிராம் கஞ்சா சிக்கியதாக கூறப்பட்டது. மேலும் கஞ்சா செடியில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட 2 பாட்டில் எண்ணெய்யும் சிக்கியது.

இதையடுத்து கரிஷ்மா பிரகாசை கடந்த மாதம் 28-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.

ஆனால் அதன்படி அவர் அன்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. கரிஷ்மா பிரகாஷ் மும்பையில் இல்லை என்று அவரது வக்கீல் கூறினார்.

இந்நிலையில், வருகிற கரிஷ்மா பிரகாஷ் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 2 நாட்களுக்கு முன் சம்மன் அனுப்பினர்.  இதேபோன்று போதை பொருள் வழக்கு ஒன்றில் திரைப்பட தயாரிப்பாளர் பிரோஸ் நாடியட்வாலாவின் மனைவி ஷபானா சயீத் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

இந்த கைது நடவடிக்கைக்கு முன் மும்பையில் உள்ள அவர்களது வீட்டில் அதிகாரிகள் சோதனையிட்டனர்.  அதில், 10 கிராம் அளவுக்கு மாரிஜுவானா என்ற போதை பொருள் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது.  
இதன் தொடர்ச்சியாக, போதை பொருள் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் பிரோஸ் நாடியட்வாலாவை விசாரணைக்கு ஆஜராகும்படி அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.  மும்பையில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் அவர் நேற்று விசாரணைக்கு ஆஜரானார்.

இந்நிலையில், தில் ஹை தும்ஹாரா, ஓம் சாந்தி ஓம் உள்ளிட்ட படங்களில் நடித்த இந்தி திரைப்பட நடிகர் அர்ஜுன் ராம்பாலின் மும்பை வீட்டில் நேற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.  இந்த வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் பிரோசின் மனைவி ஷபனா சயீத், ரூ.15 ஆயிரம் தனிநபர் பிணை தொகை செலுத்தி ஜாமீன் பெற்று கொள்ள மும்பை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டு உள்ளது.

Next Story