நிதிஷ் குமார், சுஷில் மோடிக்கு எனது ஆதரவு எப்போதும் இல்லை - சிராக் பாஸ்வான் திட்டவட்டம்


நிதிஷ் குமார், சுஷில் மோடிக்கு எனது ஆதரவு எப்போதும் இல்லை - சிராக் பாஸ்வான் திட்டவட்டம்
x
தினத்தந்தி 11 Nov 2020 10:08 AM GMT (Updated: 2020-11-11T15:38:16+05:30)

நிதிஷ் குமார் மற்றும் சுஷில் மோடிக்கு எனது ஆதரவு எப்போதும் இல்லை என்று லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பாட்னா, 

243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு 3 கட்டங்களாக அண்மையில் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. பின்னிரவு நீடித்த வாக்கு எண்ணும் பணியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது.

பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களையும் மெகா கூட்டணி 110 இடங்களையும் வென்றது. லோக் ஜனசக்தி கட்சி ஒரு இடத்தைக் கைப்பற்றியது. பிற கட்சிகள் 7 இடங்களில் வென்றது. இதன் மூலம், பீகாரில் மீண்டும் நிதிஷ் குமார் ஆட்சி அமைவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. 

இந்நிலையில் நிதிஷ் குமாருக்கு எனது ஆதரவு எப்போதுமே இல்லை, அதேசமயம் பிரதமர் மோடிக்கு எப்போதுமே ஆதரவளிப்போம் என லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, “பீகார் மக்கள் எங்களுக்கு அளப்பரிய அன்பை வழங்கி உள்ளனர். 25 லட்சம் வாக்காளர்கள் எங்களை நம்பி வாக்களித்துள்ளனர். தனித்து போட்டியிட்டு 6 சதவீத வாக்குகளை பெற்றுள்ளோம். மற்றவர்களின் ஆதரவுடன் கட்சி நடத்தும் சிலர் எங்களை விமர்சித்தனர். ஆனால் தனியாக போட்டியிட்டு எங்களை நாங்கள் நிருபித்துள்ளோம். மாநில அளவில் நிதிஷ் குமார் மற்றும் சுஷில் மோடி ஆகியோருக்கு எனது ஆதரவு எப்போதும் இல்லை. ஆனால் அதேசமயம் மத்தியில் பிரதமர் மோடிக்கு எப்போதுமே எங்கள் ஆதரவு உண்டு” என்று தெரிவித்தார். 

Next Story