பீகார் தேர்தலில் வெற்றி: உங்களது நட்பிற்கும்,விருந்தோம்பலுக்கும் பாராட்டு; நிதிஷ் குமாருக்கு தலாய் லாமா வாழ்த்து


பீகார் தேர்தலில் வெற்றி: உங்களது நட்பிற்கும்,விருந்தோம்பலுக்கும் பாராட்டு; நிதிஷ் குமாருக்கு தலாய் லாமா வாழ்த்து
x
தினத்தந்தி 11 Nov 2020 7:16 PM IST (Updated: 11 Nov 2020 7:16 PM IST)
t-max-icont-min-icon

பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளர் நிதிஷ் குமாருக்கு திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாட்னா,

243 இடங்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்ட தேர்தலை தேர்தல் கமிஷன் அறிவித்தது. அங்கு மூத்த அரசியல் தலைவரும், முதல்-மந்திரியுமான நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், பா.ஜ.க. கூட்டணிக்கும், லாலு பிரசாத் யாதவின் மகனான இளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையில் அமைந்துள்ள ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளை கொண்ட மெகா கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.

இதற்கு மத்தியில், மறைந்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வான், ஐக்கிய ஜனதாதளம் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக தனது லோக்ஜனசக்தி கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தினார்.

மேலும், பகுஜன் சமாஜ் கட்சி, ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி, ராஷ்ட்ரீய லோக்சமதா கட்சி உள்ளிட்ட கட்சிகள் ‘மாபெரும் ஜனநாயக மதச்சார்பற்ற முன்னணி’ என்ற பெயரில் ஒன்றிணைந்து (ஜி.டி.எஸ்.எப்.) வேட்பாளர்களை நிறுத்தின.

பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைமையிலான மெகா கூட்டணிக்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ், லோக்ஜனசக்தி வேட்பாளர்களை ஆதரித்து சிராக் பஸ்வான் தீவிர பிரசாரம் செய்தனர். மாபெரும் ஜனநாயக மதச்சார்பற்ற முன்னணிக்காக ஒவைசி உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த தேர்தலில், கொரோனா வைரஸ் கால வழிகாட்டும் விதிமுறைகளுடன் கடந்த மாதம் 28-ந்தேதி 71 தொகுதிகளிலும், சென்ற 3-ந்தேதி 94 தொகுதிகளிலும், 7-ந்தேதி 78 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. சில இடங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் இருந்தாலும்கூட, வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்தது.

இந்த தேர்தலில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகளவில் திரண்டு வந்து வாக்கு அளித்தது கவனத்தை ஈர்த்தது. ஆண்களின் வாக்குப்பதிவு 54.7 சதவீதம், பெண்களின் வாக்குப்பதிவு 59.4 சதவீதம் ஆகும்.

பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் 10-ந்தேதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 55 மையங்களில் வாக்கு எண்ணும் பணி, பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு பின்னர் ஐக்கிய ஜனதாதளம், பா.ஜ.க. கூட்டணியும், ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணியும் மாறி மாறி முன்னிலை பெற்றன.

கடைசியில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் 77 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக வந்தது. இரண்டாவது பெரிய கட்சியாக 72 இடங்களை பெற்று பா.ஜ.க. வந்தது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி 43 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

தனிப்பெரும்பான்மை பலம் பெற 122 இடங்கள் தேவை என்ற நிலையில், ஐக்கிய ஜனதாதளம், பா.ஜ.க. கூட்டணி சரியாக 122 இடங்களை பிடித்து பெரும்பான்மை பலம் பெற்றது. பல தொகுதிகளில் முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்ததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி உருவாகக்கூடும் என்ற நிலை இருந்தது. ஆனால் அந்த கூட்டணி மேலும் 2 இடங்களை கைப்பற்றி முன்னிலையை அதிகரித்து மீண்டும் ஆட்சியைப் பிடித்ததை உறுதி செய்தது.

கடும் இழுபறிக்குப்பின் நிதிஷ்குமார் தலைமையிலான பா.ஜனதா கூட்டணி 124 இடங்களுடன் முன்னணி பெற்றதால் அந்த அணி மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலையை எட்டியது. நிதிஷ்குமார் மீண்டும் முதல்-மந்திரி ஆகிறார்.

இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளர் நிதிஷ் குமாருக்கு திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ள அவர், உங்களது நட்பிற்கும், பீகார் வரும்போது கொடுக்கப்படும் விருந்தோம்பலுக்கும் மிகுந்த பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

பண்டைய இந்திய சிந்தனைகள் குறித்த எனது ஆர்வம் மற்றும் அதனை கொண்டு சேர்க்கும் எனது முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். 

பீகார் மக்களின் நம்பிக்கைகளை நிறைவேற்றுவதற்காக நீங்கள் சந்திக்கும் சவால்களில் வெற்றி பெறுவதற்காக வேண்டிக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Next Story