அமெரிக்க தடுப்பூசியை இந்தியாவில் சேமித்து வைப்பது மிகப்பெரும் சவாலானது - எய்ம்ஸ் இயக்குனர்


அமெரிக்க தடுப்பூசியை இந்தியாவில் சேமித்து வைப்பது மிகப்பெரும் சவாலானது - எய்ம்ஸ் இயக்குனர்
x
தினத்தந்தி 11 Nov 2020 7:20 PM GMT (Updated: 2020-11-12T00:50:29+05:30)

அமெரிக்க தடுப்பூசியை சேமிக்க மிகவும் குறைவான வெப்பநிலை தேவை என்று எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

அமெரிக்காவின் பைசர் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி ஒன்றை தயாரித்து இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளது. இந்த தடுப்பூசி 90 சதவீதத்துக்கு மேல் தொற்றை தடுப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக அந்த நிறுவனம் சமீபத்தில் தெரிவித்து இருந்தது.

இந்த தடுப்பூசியை இந்தியாவில் சேமித்து வைப்பது மிகப்பெரும் சவாலானது என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘இந்தியாவில் பெரும்பாலான தடுப்பூசிகள் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமித்து வைக்கப்படுகின்றன. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குளிர் சங்கிலியை பாதுகாக்க தடுப்பூசிகளை வைத்திருக்கும் மிகக்குறைந்த வெப்பநிலை மைனஸ் 25 டிகிரிதான். ஆனால் பைசர் நிறுவன தடுப்பூசியை சேமித்து வைக்க மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் தேவைப்படுகிறது. இது இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு மிகவும் சவாலானது’ என்று கூறினார்.

சிறிய நகரங்களில் இதுபோன்ற ஒரு வெப்பநிலையில் தடுப்பூசியை சேமித்து வைப்பதும், பராமரிப்பதும் மிகவும் கடினம் எனவும் அவர் தெரிவித்தார்.

Next Story