இந்திய-சீன எல்லையில் அமைதியை ஏற்படுத்த 3 கட்ட நடவடிக்கைகள்
லடாக் மோதலை தொடர்ந்து இந்திய-சீன எல்லையில் அமைதியை ஏற்படுத்த 3 கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், இது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
லடாக்கில் சீனாவின் அத்துமீறல் நடவடிக்கைகளால் கடந்த மே மாதம் முதல் நீடித்து வரும் பதற்றமும், பரபரப்பும் இன்னும் ஓயவில்லை. இரு தரப்பும் தலா 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களையும், ஆயுதங்களையும் களத்தில் இறக்கி எந்த சூழலையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளன.
இரு நாடுகளுக்கு இடையே இப்படி 6 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் பதற்றத்தை தணித்து எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதற்கு தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் இருநாட்டு ராணுவ கமாண்டர்கள் தலைமையிலான குழுவினர் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதில் இதுவரை கணிசமான முன்னேற்றம் எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த 6-ந் தேதி நடந்த 8-வது சுற்று பேச்சுவார்த்தை பயனுள்ள வகையில் முடிந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதை உறுதி செய்யும் வகையில் இருநாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையிலும், இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமான முறையில் இருந்ததாக கூறியிருந்தன.
தற்போது இந்த பேச்சுவார்த்தையில் பேசப்பட்ட முக்கிய அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. எல்லையில் படைகள் விலக்குவது தொடர்பாகவும், அங்கு கடந்த ஏப்ரல் மாதம் இருந்த நிலையை மீண்டும் கொண்டு வருவது தொடர்பாகவும் சில பரிந்துரைகள் வைக்கப்பட்டு உள்ளன.
குறிப்பாக அங்கிருந்து படைகளை விலக்குவது தொடர்பாக 3 கட்ட நடவடிக்கைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு இரு தரப்பும் அதை ஏற்றுக்கொண்டு உள்ளன. லடாக்கில் படைகளை விலக்கவும், அமைதியை ஏற்படுத்தவும் காலவரையறை நிர்ணயித்து நடவடிக்கை எடுக்கக்கோரும் இந்த பரிந்துரைகள் தொடர்பாக விரைவில் ஒப்பந்தமும் கையெழுத்தாகும் என தெரிகிறது.
இந்த 3 கட்ட நடவடிக்கைகளில் முதற்கட்டமாக, எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இரு தரப்பும் நிறுத்தியுள்ள பீரங்கிகள், பீரங்கி துப்பாக்கிகள், கவச வாகனங்கள் அனைத்தையும், ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட 3 நாட்களுக்குள் இருதரப்பும் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இரண்டாம் கட்டமாக, சீன ராணுவம் தற்போது முகாமிட்டுள்ள பங்கோங் சோ ஏரியின் வடக்கு கரையில் உள்ள மலை உச்சிப்பகுதி 4-ல் (பிங்கர் 4) இருந்து உச்சிப்பகுதி 8-க்கு நகர வேண்டும். அதேநேரம் இந்திய ராணுவம் தானாகவே தன்சிங் தாபா நிலைக்கு சென்று விடும்.
3-வதாக, ரிசாங் லா, முக்பாரி மற்றும் மகர் ஹில் போன்ற பங்கோங் சோ ஏரியின் தெற்கு கரைகளில் இருந்து இருதரப்பும் முற்றிலும் படைகளை விலக்கி கொள்ள வேண்டும். கடந்த ஆகஸ்டு 29-ந் தேதி நள்ளிரவில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றதால், மேற்படி பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் இந்திய ராணுவம் முகாமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தவிர கடைசிகட்ட படை விலக்கலின் போது, இரு தரப்பும் எல்லையில் விரிவான ஆய்வு நடத்தி படை விலக்கலின் உண்மைத்தன்மையை உறுதி செய்து கொள்ளும். அதைத் தொடர்ந்து எல்லையில் வழக்கமான ரோந்து பணிகளை இரு தரப்பும் மேற்கொள்ளும். இதைப்போல, ஆயுதங்களை திரும்பப்பெறும் அந்த 3 நாட்களில் இரு தரப்பும் தலா 30 சதவீத துருப்புகளையும் தினமும் திரும்பப்பெற வேண்டும்.
இந்த பரிந்துரைகள் கடந்த பேச்சுவார்த்தையில் முன் வைக்கப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றும் இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
எனினும் இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே அடுத்து நடைபெறும் 9-வது சுற்று பேச்சுவார்த்தையின்போது இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும், இந்த பேச்சுவார்த்தைகள் அடுத்த சில நாட்களில் நடைபெறும் எனவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story