அக்.1 முதல் பணியில் சேர்ந்த புதிய தொழிலாளர்களுக்கு 24% பி.எஃப். தொகையை மத்திய அரசே செலுத்தும் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு


அக்.1 முதல் பணியில் சேர்ந்த புதிய தொழிலாளர்களுக்கு 24% பி.எஃப். தொகையை மத்திய அரசே செலுத்தும் -  நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Nov 2020 2:31 PM IST (Updated: 12 Nov 2020 2:31 PM IST)
t-max-icont-min-icon

வலிமையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்திய பொருளாதாரம் 2021-ல் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தின் நிலை குறித்தும் சீரடையவைக்கும் முயற்சியாக 2வது பேக்கேஜ் திட்டங்களை பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில்  
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் வகையில் அறிவுப்புகளை வெளியிட உள்ளேன். இந்தியாவின் பொருளாதாரம் 3வது காலாண்டில் வலுவாக மீண்டு வரும் என்று ஆர்பிஐ கணித்துள்ளது. 2020-21 மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு செல்லும். 

பங்குச்சந்தைகள் தொடர்ந்து சீராக உயர்ந்து வருகிறது, ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்துள்ளது. வங்கி கடன் வளர்ச்சி அதிகரித்துள்ளது. அந்நிய நேரடிய முதலீடு அதிகரித்துள்ளது. பல்வேறு துறைகளில் பொருளாதாரம் முன்னேற்றம் அடைய உள்ளது. வலுவான பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி நாம் செல்கிறோம், கடந்த 10-15 நாட்களில், அதற்கான அறிகுறிகள் தெரிந்துள்ளது.

ஒரு நாடு - ஒரு ரேஷன் திட்டம் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது. 28 மாநிலங்களில் இந்த திட்டம் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது.

68.8 கோடி மக்கள் இந்த திட்டத்தால் பயன் பெற்றுள்ளனர். இடம்பெயர் தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பல்வேறு அமைச்சர்கள் இதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

கிஷான் கிரெடிட் கார்ட் மூலம் 2.5 கோடி விவசாயிகளுக்கு கூடுதல் கடன் வழங்கப்பட்டுள்ளது. 1.4 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் நிதி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி வசூல், ஆலை உற்பத்தி அதிகரிப்பு போன்றவை பொருளாதாரம் மீட்சி பாதையில் பயணிப்பதை காட்டுகிறது.

அக்.1 முதல் பணியில் சேர்ந்த புதிய தொழிலாளர்களுக்கு 24% பி.எஃப். தொகையை மத்திய அரசே செலுத்தும். மார்ச் 1 முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை காலகட்டத்தில் பணியை இழந்தவர்களுக்கு இந்த சலுகை பொருந்தும்.

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை அன்னிய நேரடி முதலீடு 13% அதிகரித்துள்ளது. 3வது காலாண்டில் இந்திய பொருளாதாரம் நேர்மறையான வளர்ச்சிக்கு திரும்பும்.  அக்டோபர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் தொகை சுமார் ஒரு லட்சம் கோடியை கடந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story