4 கோடி ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் தயார் - இந்திய நிறுவனம் அறிவிப்பு


4 கோடி ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் தயார் - இந்திய நிறுவனம் அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Nov 2020 5:45 AM IST (Updated: 13 Nov 2020 3:26 AM IST)
t-max-icont-min-icon

கோவிஷீல்டு தடுப்பூசி 4 கோடி ‘டோஸ்’ தயாரித்து முடிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.

புதுடெல்லி, 

உலகை இன்றளவும் அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரசை தடுத்து நிறுத்துவதற்காக இந்தியா உள்ளிட்ட முன்னணி நாடுகள் பலவும் தடுப்பூசிகளை உருவாக்கி அவற்றை மனிதர்களுக்கு செலுத்தி சோதித்து வருகின்றன.

இந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் பிரபல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா என்ற மருந்து நிறுவனமும் இணைந்து கூட்டாக கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.  இந்தியாவில் இந்த தடுப்பூசியை புனேயை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியுட் தயாரித்து, வினியோகிக்கும் உரிமையை பெற்றுள்ளது.

தற்போது சீரம் இன்ஸ்டிடியுட்டும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இந்தியாவில் 15 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசியின் 2-வது மற்றும் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்துகின்றன.

1,600 பேருக்கு இந்த மருத்துவ பரிசோதனையை நடத்துவதற்கான பதிவு இப்போது முடிந்து விட்டது.

இந்த தடுப்பூசி குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறும்போது, “மருத்துவ பரிசோதனையின் நம்பிக்கைக்குரிய முடிவுகள், கோவிஷீல்டு தடுப்பூசி, கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு யதார்த்தமான ஒரு தீர்வாக இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. இந்த தடுப்பூசி இந்தியாவில் மனித பரிசோதனையில் மிகவும் மேம்பட்ட தடுப்பூசி ஆகும்” என தெரிவித்தது.

மேலும், “2-வது மற்றும் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உதவியுடன் சீரம் இன்ஸ்டிடியுட், இந்த தடுப்பூசியை விரைவில் இந்தியாவில் கிடைக்கச்செய்யும். ஏற்கனவே இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் அபாயகரமான உற்பத்தி மற்றும் கையிருப்பு உரிமத்தின்கீழ் 4 கோடி டோஸ் தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியுட் ஏற்கனவே தயாரித்து முடித்துள்ளது” எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவிக்கிறது.

இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் பரிசோதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கு மத்தியில் அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனம், கோவோவேக்ஸ் என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.

இந்த தடுப்பூசியின் மருத்துவ வளர்ச்சிக்கும் சீரம் இன்ஸ்டிடியுட்டும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் ஒத்துழைக்கின்றன.

இந்த தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனை தென் ஆப்பிரிக்காவிலும், இங்கிலாந்திலும் தொடங்கப்பட்டுள்ளது. சீரம் இன்ஸ்டிடியுட், நோவாவேக்ஸ் நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசி மருந்தையும், அதற்கான குப்பிகளையும் பெற்றுள்ளது. இவற்றை குப்பிகளில் நிரப்பும் பணி விரைவில் முடிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.

இந்த தடுப்பூசியின் 3-வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையும் இந்தியாவில் நடத்தப்படும்.

இதுபற்றி சீரம் இன்ஸ்டிடியுட்டின் தலைமை செயல் அதிகாரி பூனவாலா கூறுகையில், “கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை வலுப்படுத்துவதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முக்கிய பங்காற்றி உள்ளது. நோய் எதிர்ப்பு மற்றும் செயல்திறன் மிக்க தடுப்பூசியை உருவாக்குவதில் இந்தியாவை முன்னணியில் வைப்பதற்கு இந்த ஒத்துழைப்பு மேலும் உதவும்” என குறிப்பிட்டார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா கூறுகையில், “கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கத்திலும், உலகளாவிய தயாரிப்பிலும் இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சமீபத்திய தொழில் நுட்பம் மற்றும் நன்கு பொருத்தப்பட்ட வசதிகளால் ஈர்க்கப்பட்டுள்ள சீரம் இன்ஸ்டிடியுட், தனது ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி வலிமையை தொடர்ந்து நிரூபித்து வருகிறது. உலகளாவிய பெருந்தொற்று நோய்க்கு எதிரான எங்கள் போராட்டத்தை மேம்படுத்துவதற்கு எங்கள் நிபுணத்துவம் மற்றும் ஆதரவை வழங்குவதற்கான எங்கள் பங்களிப்பு, இந்த கூட்டாண்மை ஆகும்” என குறிப்பிட்டார்.

Next Story