பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய சலுகைகள் - மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
கொரோனாவால் ஏற்பட்ட சரிவில் இருந்து பொருளாதாரத்தை மேம்படுத்த மேலும் பல சலுகைகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலை தடுப்பதற்காக முதல்முறையாக நாடு நீண்டதொரு ஊரடங்கை, பொது முடக்கத்தை சந்தித்தது. இதன்விளைவாக முக்கிய உற்பத்தி துறைகள் முடங்கின. பல கோடி வேலை வாய்ப்புகள் பறிபோய் உள்ளன.
நாட்டின் தொழில், வணிக துறைகள் முடங்கியதால் பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளது. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, இந்த சரிவில் இருந்து மீண்டெழுகிற வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு எடுத்து வருகிறது.
அந்த வகையில் உற்பத்தி துறைக்கு ரூ.2 லட்சம் கோடி சலுகைகளை வழங்க மத்திய மந்திரிசபை கூட்டத்தில் நேற்று முன்தினம் முடிவு எடுக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், புதிய அறிவிப்புகளை வெளியிடுவதற்காக டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் அதிகமாக இருந்து, தற்போது அது 4.89 லட்சம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா இறப்புவிகிதம் 1.47 சதவீதமாக சரிவடைந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் கூட்டு கொள்முதல் மேலாளர் கள் குறியீடு (பி.எம்.ஐ.) 54.6 சதவீதமாக இருந்தது. அக்டோபர் மாதம் இது 58.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. 9 ஆண்டுகளில் இது உற்பத்தியில் வலுவான அதிகரிப்பை செய்துள்ளது. எரிசக்தி பயன்பாட்டு வளர்ச்சி அக்டோபரில் 12 சதவீதம் ஆகும். ஜி.எஸ்.டி. வசூல், 10 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கோடியாக பெருகி இருக்கிறது. வங்கி கடன் வளர்ச்சி 5.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஏப்ரல்-ஆகஸ்டு மாதங்களில் அன்னிய நேரடி முதலீடு 35.37 பில்லியன் அமெரிக்க டாலராக (சுமார் ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்து 275 கோடி) அதிகரித்து இருக்கிறது. இது ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் 13 சதவீத வளர்ச்சி ஆகும்.
2020-21 நிதி ஆண்டின் 3-வது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்புவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
செப்டம்பர் 1-ந்தேதி நிலவரப்படி ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை 28 மாநிலங்கள் அமலுக்கு கொண்டு வந்துள்ளன. இதன்கீழ் 68.6 கோடி பேர் உணவு தானியங்களை எந்தவொரு ரேஷன் கடையிலும் பெற முடியும்.
பிரதம மந்திரியின் ‘ஆத்மநிர்பர் நிதி’யின் கீழ் 26.62 லட்சம் கடன் விண்ணப்பங்கள், தெரு வியாபாரிகளிடம் இருந்து பெறப்பட்டன. 13.78 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,373.33 கோடி கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது.
2.5 கோடி விவசாயிகள், விவசாயிகள் கடன் அட்டை மூலம் கடன் ஊக்கம் அடைந்துள்ளனர். தகுதியுள்ள 157.44 லட்சம் விவசாயிகளுக்கு விவசாயிகள் கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. 2 கட்டங்களாக ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 262 கோடி கடன் வரம்பு அனுமதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் கோடி அவசர மூலதன நிதியத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. 61 லட்சம் பேருக்கு ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.1.52 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
கடன் உத்தரவாத திட்டத்தின்கீழ் பொதுத்துறை வங்கிகள் ரூ.26 ஆயிரத்து 889 கோடி பங்குகள், பத்திரங்கள் உள்ளிட்டவற்றை வாங்கி உள்ளன. ரூ.7,227 கோடி வங்கிகளற்ற நிதி நிறுவனங்களுக்கும், வீட்டு வசதி நிதி நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 272 கோடி கடன்கள் 17 மாநிலங்களுக்கு, யூனியன் பிரதேசங்களுக்கு பண புழக்கத்துக்காக வழங்கப்பட்டுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து, பாதுகாப்பு அமைச்சகங்களுக்கு கூடுதலாக ரூ.25 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது.
11 மாநிலங்களுக்கு மூலதன செலவினங்களுக்கு ரூ.3,621 கோடி வட்டியில்லா கடன் தரப்பட்டுள்ளது. 39.79 லட்சம் வரி செலுத்துவோருக்கு ‘ரீபண்ட்’ வகையில் ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்து 800 கோடி திரும்ப தரப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் புதிய சலுகை அறிவிப்புகளையும் வெளியிட்டார். அவை வருமாறு:-
* விவசாயிகளுக்கு போதுமான அளவுக்கு உரங்கள் கிடைப்பதை உறுதி செய்யவும், வர உள்ள பயிர் சாகுபடி பருவத்தில் உரங்களை சரியான நேரத்தில் வாங்கவும் விவசாயிகளுக்கு ரூ.65 ஆயிரம் கோடி உர மானியம் வழங்கப்படும்.
* கிராமப்புற பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக கூடுதல் நிதியாக ரூ.10 ஆயிரம் கோடி ‘பிரதம மந்திரி காரிப்கல்யாண் ரோஜ்கார் யோஜனா’ திட்டத்தின் கீழ் (கொரோனாவால் இடம் பெயர்ந்தவர்களுக்கு) வழங்கப்படும்.
* ஏற்றுமதியை ஊக்குவிக்க கடனாக எக்ஸிம் வங்கிக்கு (ஏற்றுமதி இறக்குமதி வங்கி) ரூ.3 ஆயிரம் கோடி வழங்கப்படும்.
* கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் பெருமளவில் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையை மாற்றி, புதிதாக வேலைக்கு ஆட்கள் எடுப்பதை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு அதிரடி சலுகை திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இதன்கீழ் தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கும் திட்டம் ஒன்றை செயல்படுத்தும். இந்த திட்டத்தின்கீழ், எந்தவொரு நிறுவனமும் குறைந்தபட்சம் 2 முதல் அதிகபட்சம் 50 ஊழியர்களை புதிதாக வேலைக்கு அமர்த்திக்கொள்ளலாம்.
50-க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்ட நிறுவனங்கள் என்றால், குறைந்தபட்சம் 5 பேரை புதிதாக வேலைக்கு அமர்த்த வேண்டும்.
அந்த நிறுவனம், இ.பி.எப். அமைப்பில் பதிவு செய்துகொண்டுள்ள நிலையில், அங்கு ரூ.15 ஆயிரத்துக்கு குறைவான மாதச்சம்பளத்தில் வேலைக்கு சேருகிற எந்தவொரு புதிய ஊழியருக்கும் இந்த சலுகை திட்டம் பொருந்தும்.
இதன்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு (இ.பி.எப்.) புதிய ஊழியர்கள் செலுத்த வேண்டிய 12 சதவீத மாத சந்தா, அவர்களுக்காக நிறுவனங்கள் வழங்க வேண்டிய மாத சந்தா 12 சதவீதம் ஆக மொத்தம், 24 சதவீத தொகையையும் 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசே வழங்கும். இந்த திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 30-ந்தேதி வரை செயல்படுத்தப்படும்.
* கொரோனா வைரஸ் காலத்தில் (மார்ச் 1 தொடங்கி அக்டோபர் 1 வரையில்) வேலையில் இருந்து வெளியேறிய, மாதச்சம்பளம் ரூ.15 ஆயிரத்துக்கு குறைவாக பெற்ற ஊழியர்களுக்கும் இந்த சலுகை திட்டம் பொருந்தும்.
* கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சிக்காக மத்திய உயிரி தொழில்நுட்பத்துறைக்கு ரூ.900 கோடி மானியமாக வழங்கப்படும். இந்த தொகை, தடுப்பூசி மற்றும் அதன் வினியோக செலவை ஈடு கட்டாது. தடுப்பூசி கிடைக்கிறபோது அது தனியாக வழங்கப்படும்.
* உள்நாட்டில் ராணுவ தளவாடங்கள், தொழில்துறை ஊக்கத்தொகை மற்றும் உள்கட்டமைப்பு, பசுமை எரிசக்தி ஆகியவற்றுக்கான மூலதனம் மற்றும் தொழில்துறை செலவினங்களுக்காக ரூ.10 ஆயிரத்து 200 கோடி கூடுதல் பட்ஜெட் செலவினம் வழங்கப்படும்.
இவ்வாறு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார்.
Related Tags :
Next Story