பாரம்பரிய மருத்துவத்திற்கு உலக சுகாதார நிறுவனம் இந்தியாவைத் தேர்ந்தெடுத்தது இந்தியர்களுக்கு பெருமை அளிக்கிறது - பிரதமர் மோடி


பாரம்பரிய மருத்துவத்திற்கு உலக சுகாதார நிறுவனம் இந்தியாவைத் தேர்ந்தெடுத்தது இந்தியர்களுக்கு பெருமை அளிக்கிறது - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 13 Nov 2020 3:30 PM IST (Updated: 13 Nov 2020 3:30 PM IST)
t-max-icont-min-icon

பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தை நிறுவுவதற்கு உலக சுகாதார நிறுவனம் இந்தியாவைத் தேர்ந்தெடுத்தது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை அளிக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் தன்வந்தரி ஜெயந்தியையொட்டி ஆண்டுதோறும் நவம்பர் 13-ஆம் தேதி ஆயுர்வேத நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஆயுர்வேத நாளையொட்டி குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இரண்டு புதிய ஆயுர்வேத கல்லூரிகளுக்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியில் உலகத்தரத்தில் தொடங்கப்பட்டுள்ள ஆயுர்வேதம் கற்றல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 12 பிரிவுகளும், மூன்று மருத்துவ ஆய்வகங்களும், மூன்று ஆராய்ச்சிக் கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெய்ப்பூரில் செயல்பட உள்ள தேசிய ஆயுர்வேத நிறுவனம் (என்.ஐ.ஏ) ஆகிய இரு நிறுவனங்களையும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் மோடி கூறியதாவது:

ஆயுர்வேதம் இந்தியாவின் பாரம்பரியம். இது மனித குலத்தின் நலனை நோக்கமாகக் கொண்டது. மேலும், நாட்டின் பாரம்பரிய அறிவு மற்ற நாடுகளை வளமாக்குவதைக் கண்டு அனைத்து இந்தியர்களும் மகிழ்ச்சியடைவார்கள்.

பாரம்பரிய மருத்துவத்திற்காக உலகளாவிய மையத்தை நிறுவுவதற்கு உலக சுகாதார நிறுவனம் இந்தியாவைத் தேர்ந்தெடுத்தது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை அளிக்கிறது. 

இந்தப் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்கியதற்காக உலக சுகாதார நிறுவனத்திற்கும் குறிப்பாக அதன் இயக்குநருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியா உலகின் மருந்தகமாக உருவெடுத்துள்ளது. அதைப்போலவே, பாரம்பரிய மருத்துவத்திற்கான இந்த மையம் உலகளாவிய ஆரோக்கியத்திற்கான மையமாக இந்தியாவில் அமையும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

முன்னதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறியதாவது:

உலக சுகாதார மருத்துவத்தின் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தை இந்தியாவில் திறக்க ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது பாரம்பரிய மற்றும் பக்க விளைவற்ற மாற்று மருத்துவத்தின் சான்றுகள், ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் விழிப்புணர்வை வலுப்படுத்தும்.

இந்தப் புதிய மையம் உலக சுகாதார நிறுவனத்தின் பாரம்பரிய மருத்துவ முறைகளை அமல்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும்.

அத்துடன் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான, சிறந்த மற்றும் பாதுகாப்பான உலகத்தைக் கட்டமைக்கும் பாரம்பரிய மருத்துவத்தின் பங்கை வலுப்படுத்தும் கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்களை வளர்ப்பதில் ஈடுபடும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story