டெல்லியில் தடையை மீறி பட்டாசு வெடிப்பு: மிகவும் மோசமடைந்த காற்றின் தரம்
டெல்லியில் தடையை மீறி பல இடங்களில் பட்டாசு வெடித்ததால் காற்றின் தரம் மோசமடைந்தது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் (என்சிஆா்) பகுதிகள் உள்பட நாடு முழுவதும் காற்றின் தரம் மோசமாக உள்ள நகரங்களில் வரும் 30-ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும், வெடிப்பதற்கும் தடை விதித்து தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
இதன் பிறகு டெல்லி, என்சிஆா் பகுதிகளில் காற்றின் தரம் 11-ம் தேதி சற்று அதிகரித்தது. எனினும் கடந்த இரு தினங்களாக மிக மோசமாக இருந்த காற்றின் தரம், தீபாவளி நாளான இன்று மிகவும் மோசமடைந்தது.
டெல்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு நேற்று அறிவிப்பின் படி, 346 ஆக இருந்தது. டெல்லியின் அண்டை நகரங்களான ஃபரீதாபாத் (327), காஜியாபாத் (360), நொய்டா (331), கிரேட்டா் நொய்டா (329), குருகிராம் (328) ஆகியவற்றிலும் காற்றின் தரம் 'மிகவும் மோசம் பிரிவில்' பதிவானது. மாலை 4 மணியளவில் ஃபரீதாபாத் (319), காஜியாபாத் (382), நொய்டா (337), கிரேட்டா் நொய்டா (324), குருகிராம் (319) ஆகியவற்றிலும் காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற பிரிவில் பதிவானது. காற்றில் மாசுவின் அளவை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், தீபாவளி நாளான இன்று பல இடங்களில் தடைமீறி பட்டாசு விற்பனை மற்றும் பட்டாசு வெடித்ததாக இதுவரை 50க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 85 கிலோ பட்டாசுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
டெல்லியில் காற்றின் தரம் அபாய கட்டத்தை தாண்டியதால் டெல்லி முழுவதும் இயந்திரங்கள் மூலம் உயர் கட்டிடங்கள் மற்றும் மரங்களின் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காற்றின் தரம் குறைவால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story