பீகாரில் பா.ஜ.க.கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடக்கிறது


பீகாரில் பா.ஜ.க.கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 14 Nov 2020 11:55 AM GMT (Updated: 2020-11-14T17:25:18+05:30)

பீகாரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடக்கிறது.

பாட்னா,

சமீபத்தில் பீகாரில் 3 கட்டங்களாக நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.

இந்த தேர்தலில் பா.ஜ.க. 74 இடங்களில் வென்று இரண்டாவது தனிப்பெரும் கட்சியாக வந்தது. அதன் கூட்டணி கட்சிகளான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 43 இடங்களிலும், வி.ஐ.பி. மற்றும் எச்.ஏ.எம்.எஸ். கட்சிகள் தலா 4 இடங்களிலும் வெற்றி பெற்றன.

சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை விட 31 எம்.எல்.ஏ.க்கள் குறைவாக பெற்றிருந்தாலும், ஏற்கனவே அந்த கட்சியின் தலைமை அளித்த வாக்குறுதியின்படி ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் தான் முதல்-மந்திரி பதவியை ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், தற்போதைய சட்டசபையை கலைக்க கவர்னருக்கு சிபாரிசு செய்வது என முடிவு எடுக்கப்பட்டது. அதையடுத்து, கவர்னர் பாகு சவுகானை நிதிஷ்குமார் சந்தித்தார். தனது மந்திரிசபையின் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். மேலும், சட்டசபையை கலைக்கக் கோரும் சிபாரிசை அளித்தார்.

நிதிஷ்குமாரின் ராஜினாமாவை கவர்னர் ஏற்றுக்கொண்டார். புதிய அரசு பதவி ஏற்கும்வரை இடைக்கால முதல்-மந்திரியாக நீடிக்குமாறு நிதிஷ்குமாரை கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே, பாட்னாவில் நிதிஷ் குமார் இல்லத்தில் பா.ஜனதா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் சட்டசபை பா.ஜ.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நாளை மதியம் 12.30 மணிக்கு நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story