பீகாரில் தொடர்ந்து 4வது முறையாக முதல் மந்திரியாக பொறுப்பேற்கிறார் நிதீஷ் குமார்
பீகாரில் தொடர்ந்து 4வது முறையாக முதல் மந்திரியாகும் நிதீஷ் குமார் திங்கட்கிழமை மதியம் பொறுப்பேற்று கொள்கிறார்.
புதுடெல்லி,
243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது.
அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. 74 தொகுதிகளை கைப்பற்றி ஆளும் கூட்டணியில் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. நிதீஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சி 43 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அந்த கூட்டணி ஆட்சியை தக்கவைத்து கொண்டுள்ளது.
இதனை தொடர்ந்து அடுத்து ஆட்சி அமைப்பது பற்றி முடிவெடுப்பதற்காக நிதீஷ் குமார் தலைமையில் கடந்த 13ந்தேதி அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், இதுவரை ஒத்துழைப்பு அளித்த அமைச்சரவையின் அனைத்து சகாக்களுக்கும் முதல் மந்திரி நிதீஷ் குமார் தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.
நவம்பர் 29ந்தேதியுடன் முடிவடைய உள்ள சட்டசபை கடந்த 13ந்தேதி கலைக்கப்பட்டது. இந்த நடைமுறைகள் முடிந்த பின்னர் பீகாரில் புதிய அரசு அமைவதற்காக நிதீஷ் குமார் முதல் மந்திரி பதவியில் இருந்து விலகினார். இதனை கவர்னர் பகு சவுகான் ஏற்று கொண்டார். எனினும், புதிய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் வரை முதல் மந்திரியாக நீடிக்கும்படி நிதீஷ் குமாரிடம் கவர்னர் கேட்டு கொண்டார்.
இதன்பின்னர் ஞாயிற்று கிழமை மதியம் தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அடுத்த முதல் மந்திரியாக நிதீஷ் குமார் தொடர்வது என ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.
இதுபற்றி நிதீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, தேசிய ஜனநாயக கூட்டணியின் முடிவு கவர்னரிடம் தெரிவிக்கப்பட்டு விட்டது. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதமும் வழங்கப்பட்டு விட்டது. நாளை மதியம் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறினார்.
இதுபற்றி நாங்கள் பேசி, யாரெல்லாம் பதவி பிரமாணம் எடுக்க வேண்டும் என முடிவு செய்வோம். சட்டசபை கூடவேண்டிய நாள் பற்றி அமைச்சரவை முடிவு செய்யும் என கூறினார். இதனால், பீகார் முதல் மந்திரியாக 4வது முறையாக நிதீஷ் குமார் பொறுப்பேற்க உள்ளார்.
Related Tags :
Next Story