புதையல் ஆசை; மந்திரவாதி பேச்சை கேட்டு சொந்த குழந்தைகளை பலி கொடுக்க துணிந்த சகோதரர்கள்
அசாமில் மரத்தின் கீழ் தங்க புதையல் கிடைக்கும் என்ற மந்திரவாதியின் பேச்சை கேட்டு இரு சகோதரர்கள் சொந்த குழந்தைகளை பலி கொடுக்க துணிந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கவுகாத்தி,
அசாமின் கவுகாத்தி நகரில் இருந்து கிழக்கே அமைந்த திமோவ்முக் கிராமத்தில் ஜமியூர் உசைன் மற்றும் சரிபுல் உசைன் என்ற இரு சகோதரர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் தலா 3 குழந்தைகள் உள்ளனர்.
சமீப நாட்களாக இவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கிராமவாசிகள் போலீசில் தகவல் தெரிவித்துள்ளனர். இதன்படி, போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த சகோதரர்களிடம் பெஜ் என்ற மந்திரவாதி, உங்களுடைய குழந்தைகளை பலி கொடுத்து விட்டால், உங்களது வீட்டில் உள்ள மாமரத்தின் கீழ் மறைந்துள்ள தங்க புதையலை கண்டறிவீர்கள் என கூறியுள்ளார்.
இதனை உண்மை என நம்பி அவர்கள் இருவரும் தங்களுடைய குழந்தைகளை அடைத்து வைத்துள்ளனர். இதனை அறிந்த கிராமத்தினர் சகோதரர்கள் இருவரையும், அவர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
முறையாக புகார் அளிக்காமல், சாட்சிகள் இல்லாமல் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அந்த குடும்பத்தினரை தங்களது காவலின் கீழ் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த அவர்கள், குழந்தைகளின் உடல்நலனுக்காக பெஜ்ஜிடம் ஆலோசனை கேட்டோம் என கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் மந்திரவாதியை பிடித்து விசாரணை மேற்கொண்டால் வழக்கில் தெளிவு வரும் என்ற சூழலில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story