மந்திரவாதியின் பேச்சை கேட்டு சூனியம் செய்ய 6 வயது சிறுமியை கொலை செய்து நுரையீரலை எடுத்த கும்பல்


மந்திரவாதியின் பேச்சை கேட்டு சூனியம் செய்ய 6 வயது சிறுமியை கொலை செய்து நுரையீரலை எடுத்த கும்பல்
x
தினத்தந்தி 17 Nov 2020 12:47 PM IST (Updated: 17 Nov 2020 12:47 PM IST)
t-max-icont-min-icon

மந்திரவாதியின் பேச்சை கேட்டு சூனியம் செய்ய 6 வயது சிறுமியை கொலை செய்து நுரையீரலை எடுத்து சென்ற கும்பல் சிக்கியது.

புதுடெல்லி: 

உத்தரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் இறந்த நிலையில் 6 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதாகவும் அவரது நுரையீரல் உடலில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. கட்டம்பூர் பகுதியிலிருந்து இந்த சிறுமி தீபாவளியன்று இரவு காணாமல் போய் உள்ளார்.

ஒரு பெண், குழந்தை பாக்கியத்தைப் பெற ஒரு சிறுமியின் நுரையீரல் கொண்டு சில சடங்குகள் செய்ய வேண்டும் என்ற மூட நம்பிக்கையால், நுரையீரல் சிறுமியின் உடலிலிருந்து அகற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான அங்குல் குரில் (20) மற்றும் பீரன் (31) ஆகியோர் முக்கிய குற்றவாளியும்  பரசுராம் குரிலிடம் சூனியம் செய்ய சிறிமியின் நுரையீரலை அளித்ததாக மூத்த போலீஸ் அதிகாரி பிரஜேஷ் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.

பரசுராம் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பரசுராமின் மனைவிக்கும் தெரிந்திருந்தும் அவர் இது குறித்து யாரிடமும் கூறாமல் இருந்ததால், அவரும் கைது செய்யப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பரசுராம் ஆரம்பத்தில் போலீசார் விசாரணையை திசை திருப்ப முயன்றார். ஆனால் தீவிர விசாரணையை எதிர்கொண்ட அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் 1999 இல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இதுவரை அவருக்கு குழந்தை பிறக்கவில்லை. அதைத் தொடர்ந்து அவர் தனது மருமகன் அன்குல் மற்றும் அவரது நண்பர் பீரன் ஆகியோரிடம் சிறுமியைக் கடத்தி, நுரையீரலை அகற்றும்படி வற்புறுத்தினார்.

அதிக அளவில் குடிபோதையில் இருந்த குற்றவாளிகள் சிறுமியைக் கடத்திச் சென்று கொலை செய்வதற்கு முன்பு அவரை பாலியல் பலாத்காரம்செய்தனர்.

இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விரைவாக தண்டனை வழங்கப்படும் வகையில் இந்த வழக்கு விரைவான நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ .5 லட்சம் நிதி உதவி வழங்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.



Next Story