தேர்தல் தோல்வியால் அப்துல்லா, மெஹ்பூபாவுக்கு காங்கிரஸ் ஆதரவா? விளக்கம் கேட்கிறார் அனுராக் தாக்குர்
காங்கிரஸ் கட்சியின் தொடர் தேர்தல் தோல்வியால் அப்துல்லா, மெஹ்பூபாவுக்கு ஆதரவாக உள்ளதா? என காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலுக்கான பா.ஜ.க. பொறுப்பாளர் அனுராக் தாக்குர் விளக்கம் கேட்டுள்ளார்.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆக பிரிக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடத்த முடிவானது. இதன்படி, ஜம்மு மற்றும் காஷ்மீரில் வருகிற 28ந்தேதி முதல் டிசம்பர் 19ந்தேதி வரை மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற டிசம்பர் 22ந்தேதி நடைபெறும்.
இந்த தேர்தலில், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மக்கள் மாநாட்டு கட்சி மற்றும் சி.பி.ஐ. (எம்.) ஆகியவை முக்கிய கட்சிகளாக போட்டியிடுகின்றன. இந்த தேர்தலை முன்னிட்டு உள்ளாட்சி தேர்தலுக்கான பா.ஜ.க. பொறுப்பாளராக அனுராக் தாக்குர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சியின் தலைவர் குலாம் அகமது மிர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, காஷ்மீரில் வலுகட்டாயத்துடன் சட்டங்களை அமல்படுத்தி வருபவர்களை தோற்கடிக்க முயற்சிப்போம் என்று கூறினார்.
இந்நிலையில், காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலுக்கான பா.ஜ.க. பொறுப்பாளர் அனுராக் தாக்குர் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முக்தி ஆகியோரின் பார்வைகளுடன் காங்கிரஸ் கட்சி ஒத்து போகிறதா? அல்லது தொடர் தேர்தல் தோல்வியால், அவர்களுடன் தேர்தல் கூட்டணி ஏற்படுத்தி கொள்ளும் எதிர்பார்ப்புடன் உள்ளதா? என்பது பற்றி காங்கிரஸ் கட்சி தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story