முதல்-மந்திரி எடியூரப்பா இன்று டெல்லி பயணம்
மந்திரிசபை விஸ்தரிப்புக்கு ஒப்புதல் பெற முதல்-மந்திரி எடியூரப்பா இன்று (புதன்கிழமை) டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.
பெங்களூரு,
கர்நாடக மந்திரிசபையில் தற்போது 7 இடங்கள் காலியாக உள்ளன. பீகார் தேர்தலுக்கு முன்பே மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி எடியூரப்பா திட்டமிட்டிருந்தார். ஆனால் அந்த தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதா தேசிய தலைவர்கள் தீவிரமாக பங்கேற்று இருந்தனர். அதனால் பீகார் தேர்தல் முடிவடையும் வரை மந்திரிசபை விஸ்தரிப்பை ஒத்திவைக்குமாறு எடியூரப்பாவுக்கு அக்கட்சி தலைவர்கள் அறிவுறுத்தினர். மேலும் கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலும் இருந்ததால், மந்திரிசபையை விரிவாக்கம் செய்யும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்-மந்திரி எடியூரப்பா, “பீகாரில் புதிய அரசு அமைக்கும் பணியில் எங்கள் கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த பணிகள் நிறைவடைந்ததும் நான் டெல்லிக்கு சென்று, மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிப்பேன்“ என்றார். அதன்படி தற்போது பீகாரில் புதிய அரசு அமைக்கும் பணிகள் முடிவடைந்துவிட்டன. இந்த நிலையில் மந்திரிசபை விஸ்தரிப்புக்கு ஒப்புதல் பெற முதல்-மந்திரி எடியூரப்பா இன்று (புதன்கிழமை) காலை 11.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
அங்கு உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை எடியூரப்பா நேரில் சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. முக்கியமாக ஜே.பி.நட்டாவுடன் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்தவுள்ள எடியூரப்பா, அதற்கு ஒப்புதலும் பெற இருக்கிறார். மந்திரிசபையில் சரியாக செயலாற்றாத சிலரை நீக்குவது குறித்தும் முதல்-மந்திரி முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
முதல்-மந்திரி எடியூரப்பா இந்த சந்திப்பை முடித்துக் கொண்டு, இன்று இரவே பெங்களூரு திரும்புகிறார். எடியூரப்பாவின் டெல்லி பயணத்தையொட்டி, மந்திரி பதவியை எதிர்நோக்கி இருப்பவர்கள் எம்.எல்.ஏ.க்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மந்திரிசபை விரிவாக்கத்தின்போது, இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முனிரத்னா, எம்.எல்.சி.க்கள் எம்.டி.பி.நாகராஜ், ஆர்.சங்கர், சி.பி.யோகேஷ்வர், அரவிந்த் லிம்பாவளி ஆகியோருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story