ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு: 2 பேர் காயம்


ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு: 2 பேர் காயம்
x
தினத்தந்தி 18 Nov 2020 1:57 PM IST (Updated: 18 Nov 2020 1:57 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீர் குப்வாரா பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் ஒருவர் உயிரிந்தார்.

ஜம்மு,

கடந்த சில தினங்களாகவே, ஜம்மு - காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவு, நிலச்சரிவுகள் காரணமாக ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. காஷ்மீரை மற்ற மாநிலங்களுடன் இணைக்கும் முக்கியச் சாலைகளில் இதுவே பிரதானமானது. எல்லாக் காலநிலையிலும் இந்தச் சாலை பெரும்பாலும் திறந்தே இருக்கும். ஆனாலும், கடந்த 4 நாட்களாக ஏற்பட்ட பனிப்பொழிவால் இச்சாலை மூடப்பட்டது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் வடக்கு குப்வாரா மாவட்டத்தில் நேற்று இரவு  8 மணி அளவில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.

பனிச்சரிவில், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி அருகே ரோஷன் போஸ்ட் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்கள் இதில் சிக்கினர். இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர்.

உயிரிழந்த ராணுவ வீரர் நிகில் சர்மா (25) 7-வது ராஷ்ட்ரிய ரைஃபிள் படையைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்களின் அடையாளமும் தெரியவந்துள்ளது. காயமடைந்த ரமேஷ் சந்த், குருவீர்ந்தர் சிங் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குப்வாரா, பந்திப்போரா, பாரமுல்லாம், கண்டெர்பால் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் காஷ்மீர் மாநில அரசு பனிச்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 15-ம்தேதி சின்தன் பாஸ் பகுதியில் கடும் பனிப்பொழிவில் சிக்கிக் கொண்ட 2 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 10 பேரை ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

மாநிலத்தின் மேலும் 4 மாவட்டங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மீட்புக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Next Story