2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் விடுவிக்கப்பட்டவர்களுக்கு எதிராக சிபிஐ மனு; 2021 ஜனவரி 13-ம் தேதி முதல் விசாரணை: டெல்லி ஐகோர்ட்


2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் விடுவிக்கப்பட்டவர்களுக்கு எதிராக சிபிஐ மனு; 2021 ஜனவரி 13-ம் தேதி முதல் விசாரணை: டெல்லி ஐகோர்ட்
x
தினத்தந்தி 1 Dec 2020 4:19 PM IST (Updated: 1 Dec 2020 4:19 PM IST)
t-max-icont-min-icon

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் விடுவிக்கப்பட்டவர்களுக்கு எதிராக சிபிஐ மனு மீது 2021 ஜனவரி 13-ம் தேதி முதல் விசாரணை நடைபெறும் என டெல்லி ஐகோர்ட் கூறி உள்ளது.

புதுடெல்லி

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இருந்த முன்னாள் தொலைத்தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவன தலைவர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட 19 பேரை தனிக்கோர்ட்டு விடுதலை செய்து வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அமலாக்கப்பிரிவும், சி.பி.ஐ.யும் டெல்லி ஐகோர்ட்டில் தனித்தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்து உள்ளன. இந்த மனுக்களை விரைவாக விசாரிக்க கோரி அவற்றின் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை  விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, பதில் மனு தாக்கல் செய்யுமாறு ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இந்த வழக்கின் விசாரணையைக் கவனித்து வந்த டெல்லி ஐகோர்ட்  நீதிபதி பிரிஜேஸ் சேத்தி நவம்பர் மாதத்தோடு ஓய்வு பெற்றுவிட்டார்.

இந்த வழக்கில் சிபிஐ தரப்பு தனது வாதத்தைக் கடந்த ஜனவரி 15-ம் தேதி முடித்துக்கொண்டது. ஆனால், அதன்பின் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வழக்கின் விசாரணை நடக்கவில்லை.

இந்நிலையில் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பிரிஜேஸ் சேத்தி நவம்பர் மாதத்தோடு ஓய்வு பெற்றுவிட்டதால், இந்த வழக்கு வழக்கு நீதிபதி கண்ணாவுக்கு மாற்றப்பட்டது.

2 ஜி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று  மீண்டும் சிபிஐ தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
சிபிஐ மேல்முறையீடு செய்ததற்கு எதிராக 2ஜி வழக்கில் விடுவிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களையும் ஐகோர்ட்  நிராகரித்தது.

அதுமட்டுமல்லாமல், 2ஜி வழக்கில் விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக சிறப்பு அனுமதி மனுவை சிபிஐ தாக்கல் செய்திருந்தது. இந்த மனு கடந்த அக்டோபர் மாதம் நாள்தோறும் நீதிபதி பிரிஜேஸ் சேத்தி முன் விசாரிக்கப்பட்டாலும், உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை. அவரும் ஓய்வு பெற்றுவிட்டார்.

இந்நிலையில், சிபிஐ தாக்கல் செய்த சிறப்பு அனுமதி மனுவை 2021-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை விசாரிப்பதாக நீதிபதி கண்ணா இன்று அறிவித்தார்.

சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சோனியா மாத்தூர், டிசம்பர் மாதத்திலேயே விசாரித்து முடிவு அறிவிக்கக் கோரினார். ஆனால், அதற்கு நீதிபதி கண்ணா மறுத்து ஜனவரியில் விசாரிக்கப்படும் என அறிவித்தார்.

Next Story