விவசாயிகள் போராட்டம் இன்று 7-வது நாள்: மத்திய அரசுடன் நாளை அடுத்த சுற்று பேச்சு


விவசாயிகள் போராட்டம் இன்று 7-வது நாள்:  மத்திய அரசுடன் நாளை அடுத்த சுற்று பேச்சு
x
தினத்தந்தி 2 Dec 2020 6:45 AM IST (Updated: 2 Dec 2020 6:45 AM IST)
t-max-icont-min-icon

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை. நாளை அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடக்கிறது.

புதுடெல்லி, 

மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி அரசு 3 வேளாண் சட்டங்களை கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வந்தது. இந்த சட்டங்களால் வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கும் முறை ஒழிக்கப்பட்டு விடும்; நாட்டின் முதுகெலும்பான விவசாயமானது, பெரு நிறுவனங்கள் மயமாக மாறி விடும் என்று விவசாயிகள் பயப்படுகின்றனர். 

ஆனால் இந்த சட்டங்கள், விவசாயிகளுக்கு நன்மையைத்தான் செய்யும், புதிய வாய்ப்புகளையும், உரிமைகளையும் தரும், தொழில்நுட்பங்களை கொண்டு வரும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனாலும், இந்த 3 சட்டங்களையும் திரும்பப்பெற்றாக வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக அமைந்துள்ளது. இதை வலியுறுத்தி அவர்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் என வட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு தொடர்ந்து 6-வது நாளாக நேற்று போராட்டம் நடத்தினர். கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்கள் அசைந்து கொடுக்கவில்லை.

இந்த நிலையில், விவசாயிகள் போராட்டம் குறித்து மூத்த மந்திரிகள் அமித் ஷா (உள்துறை), ராஜ்நாத் சிங் (ராணுவம்) நரேந்திரசிங் தோமர் (விவசாயம்), பியுஷ் கோயல் (ரெயில்வே, வர்த்தகம், தொழில்), பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் நேற்று காலை நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து டெல்லி விஞ்ஞான பவனில் பிற்பகலில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகின. உடனே அந்த வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி பிற்பகலில் 35 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை மத்திய அரசு அழைத்து நேரடி பேச்சு வார்த்தை நடத்தியது.

இதில், விவசாய மந்திரி நரேந்திர சிங் தோமர், ரெயில்வே மந்திரி பியுஷ்கோயல், வர்த்தக ராஜாங்க மந்திரியும், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த எம்.பி.யுமான சோம் பர்காஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். 35 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்கள், பேச்சுவார்த்தையின்போது 3 விவசாய சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை ஒருமனதாக வலியுறுத்தி கூறினர்.

3 விவசாய சட்டங்கள் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்வதற்கு 5 உறுப்பினர்களை கொண்ட குழுவை அமைக்கலாம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை விவசாய சங்க பிரதிநிதிகள் ஏற்க மறுத்து விட்டனர். இதனால் 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் விவசாய மந்திரி நரேந்திரசிங் தோமர் கூறுகையில், “நாங்கள் ஒரு சிறு குழுவை அமைக்க வேண்டும் என்று கூறினோம். ஆனால் அவர்களோ, அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றனர். அவர்கள் போராட்டத்தை முடிக்க வேண்டும், பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என விரும்புகிறோம். ஆனால் இது விவசாயிகளை பொறுத்தது” என குறிப்பிட்டார்.

5 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைப்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும், இதுகுறித்து விவசாய அமைப்புகள் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இருப்பினும் 3-ந் தேதி (நாளை) அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். எனவே நாளை அடுத்த சுற்று பேச்சு வார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் விவசாயிகள் போராட்டம் இன்று 7-வது நாளாக நீடிக்கிறது.

விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தையின் போது, புதிய வேளாண் சட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பிரச்சினைகளை கண்டறிந்து, அதுகுறித்து அரசின் பரிசீலனைக்கு  இன்று தெரிவிக்கும்படி விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளிடம் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த பிரச்சினைகள் தொடர்பாக நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Next Story