பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய வீரர்கள் தடயங்களை சேகரித்தனர்
பயங்கரவாதிகளின் சுரங்கப்பாதை வழியாக இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து தடயங்களை சேகரித்தனர்.
புதுடெல்லி,
கடந்த மாதம் 19-ந் தேதி பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் 4 பேரை ஜம்முவின் நக்ரோட்டாவில் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். அவர்கள் எப்படி இந்திய பகுதிக்குள் நுழைந்தனர் என்று பாதுகாப்பு படையினரும், போலீசாரும் ஆராய்ந்தபோது, ஜம்மு சம்பா பகுதியில் சர்வதேச எல்லைக்கோடு அருகே ஒரு ரகசிய சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அது எவ்வாறு அமைந்திருக்கிறது, எவ்வளவு தூரம் செல்கிறது என்று அறிவதற்காக, இந்திய எல்லை பாதுகாப்பு படை அணி ஒன்று சுரங்கப்பாதை வழியாக சென்று பார்த்தது. அப்போது அந்த சுரங்கப்பாதை, சர்வதேச எல்லை தாண்டி பாகிஸ்தான் பகுதிக்குள் 200 மீட்டர் தூரம் சென்று திறப்பது தெரியவந்தது.
புலனாய்வு தகவல்களின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மிக விரைவாக நடைபெற்றது. அப்போது, சுரங்கப்பாதை பாகிஸ்தானியர்களால் தோண்டப்பட்டது என்பதற்கான தடயங்கள் சேகரிக்கப்பட்டதுடன், காட்சிகளும் வீடியோ பதிவு செய்யப்பட்டன.
ரகசிய சுரங்கப்பாதையின் இந்திய பகுதி வாயில், புதர்களுக்குள் மறைவாக அமைந்திருந்தது என்றும், அங்கு காணப்பட்ட மணல் சாக்குகளில் பாகிஸ்தானின் கராச்சியை குறிக்கும் எழுத்துகள் இடம்பெற்றிருந்தன என்றும் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். புதிதாக தோண்டப்பட்டது போல காணப்படும் இந்த சுரங்கப்பாதை தற்போதுதான் முதன் முதலாக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story