சபரிமலை அய்யப்பன் கோவிலில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி
சபரிமலை அய்யப்பன் கோவிலில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு கேரள அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது. அதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.
திருவனந்தபுரம்,
சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15 ந்தேதி திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக சபரிமலை அய்யப்பன் கோவிலில் சாமியை தரிசனம் செய்ய வார நாட்களில் தினசரி 1,000 பக்தர்களும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் 2 ஆயிரம் பக்தர்களும் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் சபரிமலை தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க, திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் தலைமை செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையிலான நிபுணர் குழுவும் சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக சிபாரிசு செய்தது.
அதைத்தொடர்ந்து சாமி தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான உத்தரவை கேரள அரசு வெளியிட்டு உள்ளது. இதன்படி வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 2 ஆயிரம் பக்தர்களும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 3 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மண்டல பூஜை நடைபெறும் டிசம்பர் 26 ந்தேதி மற்றும் மகர விளக்கு பூஜை. நடைபெறும் 2021 ஜனவரி 14 ஆகிய 2 நாட்கள் 6 ஆயிரம் பக்தர்கள் வீதம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
சன்னிதானத்தில் பணியில் உள்ள ஊழியர்களுக்கு கொரோனா தொற்று வேகமாக பரவி வந்ததால், சுகாதார துறை சார்பில் கூடுதல் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்த வந்த நிலையில், கூடுதலாக தினமும் 1,000 பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய அனுமதி அளித்த அரசின் உத்தரவு, பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story