இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,604 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,604 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பெருந்தொற்றால், உலகம் இன்னும் அல்லல் பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. உலகின் மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் நமது நாடு இருக்கிறது. ஆனாலும் தற்போது கவலைப்படுகிற சூழல் இங்கு இல்லை.
இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் எடுத்த ஆக்கப்பூர்வமான கூட்டு நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல், தொடர்ந்து இறங்கு முகத்தில் சென்று கொண்டிருக்கிறது.
குறிப்பாக கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்தே கொரோனா பரவல் குறைந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,
ஒரே நாளில் 43 ஆயிரத்து 062 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். நாட்டில் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 89 லட்சத்து 32 ஆயிரத்து 647 ஆக உள்ளது.
இன்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் நாடு முழுவதும் கொரோனாவுக்கு 501 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்து 122 ஆக அதிகரித்து இருக்கிறது.
36 ஆயிரத்து 604 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு 94 லட்சத்து 99 ஆயிரத்து 414 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து மீள்வதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 28 ஆயிரத்து 644 ஆகும்.
இந்தியாவில் தொடர்ந்து 22-வது நாளாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் கீழாக பதிவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story