வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும் - விவசாய அமைப்புகள் கோரிக்கை
நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுக்க வேண்டும் என விவசாய அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன
புதுடெல்லி
மத்திய அரசு 3 கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 7 வது நாளாக போராட்டம் நீடித்தது.
மத்திய அரசுடனான முதல் கட்ட பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு பிறகும் நீடித்து வரும் இந்த போராட்டத்திற்கு எந்தவித சரியான தீர்வும் கிடைக்காததால், நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் 32 விவசாய அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
இதுபற்றி விவசாயத் தலைவர் தர்ஷன் பால் கூறும்போது
விவசாய அமைப்புகளிடையே பிளவுகளை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. ஆனால், அது நடக்காது. 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுக்க வேண்டும்.
மற்றொரு விவசாயத் தலைவர் குர்னம் சிங் கூறுகையில் புதிய சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால், எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நாட்களில் மேற்கொண்டு தீவிர போராட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார்.
இந்த நிலையில் மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:-
"வேளாண் சட்டங்கள் அவர்கள் நலனுக்காகவும், சீர்திருத்தங்கள் நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் செய்யப்பட்டு வருவதாகவும் விவசாயிகளிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன், ஆனால் அவர்களுக்கு அதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், அவர்களின் கவலைகளை தீர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.விவசாயிகளுடன் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.
Related Tags :
Next Story