நாட்டில் புதிதாக 35 ஆயிரத்து 551 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி
கடந்த 24 மணி நேரத்தில் நமது நாட்டில் புதிதாக 35 ஆயிரத்து 551 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் நம்மை கதிகலங்க வைத்த நாட்கள் உண்டு. ஆகஸ்டு 7-ந் தேதி 20 லட்சம், 23-ந் தேதி 30 லட்சம், செப்டம்பர் 5-ந் தேதி 40 லட்சம், 16-ந்தேதி 50 லட்சம், 29-ந் தேதி 60 லட்சம், அக்டோபர் 11-ந் தேதி 70 லட்சம், 29-ந் தேதி 80 லட்சம் என 10 லட்சங்களை கடப்பதில் வேகம் காட்டிய தொற்று பரவல் கொஞ்சம் கட்டுப்படத்தொடங்கியது. நவம்பர் 20-ந் தேதி அது 90 லட்சத்தைக் கடந்தது.
ஒரு நாள் பாதிப்பு கிட்டத்தட்ட 1 லட்சம் என்ற அளவுக்கு எல்லாம் வேகம் எடுத்தது. இப்போதோ இந்த நாடு கொரோனா வைரஸ் என்ற எதிரியிடம் இருந்து மெல்ல மெல்ல விடுபட்டுக்கொண்டிருக்கிறது. இது சாமானிய மனிதர்கள் முதல் அத்தனை பேரையும் நிம்மதிப்பெருமூச்சுவிட வைத்திருக்கிறது.
இன்று காலை 8 மணியுடன் முடிந்த நாளில் நமது நாட்டில் புதிதாக 35 ஆயிரத்து 551 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 94,99,413-ல் இருந்து 95,34,964 ஆக அதிகரித்து இருக்கிறது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதித்து, பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று ஒரே நாளில் 40 ஆயிரத்து 726 பேர் குணம் அடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இதன்மூலம் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 89 லட்சத்து 73 ஆயிரத்து 373 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 94.11 சதவீதமாக உயர்ந்துள்ளது.உயிரிழப்பு விகிதம் 1.45% ஆக உள்ளது.
ஒரே நாளில் கொரோனாவால் 526 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்து 648 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாட்டில் கொரோனாவுக்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 22 ஆயிரத்து 943 ஆக உள்ளது.
133 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை இந்த அளவுக்கு குறைந்து இருக்கிறது என மத்திய சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டுகிறது.
கேரளா, மராட்டியம், டெல்லி, மேற்கு வங்காளம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் புதிதாக தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
11 லட்சத்து 11 ஆயிரத்து 698 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இதன்மூலம் நாட்டில் பரிசோதிக்கப்பட்டுள்ள மாதிரிகளின் எண்ணிக்கை 14.3 கோடியை தாண்டி உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புள்ளி விவரம் கூறுகிறது.
Related Tags :
Next Story