விவசாயிகளை பிரிக்க மத்திய அரசு முயற்சி; விவசாய அமைப்புகள் குற்றச்சாட்டு


விவசாயிகளை பிரிக்க மத்திய அரசு முயற்சி; விவசாய அமைப்புகள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 3 Dec 2020 10:43 AM IST (Updated: 3 Dec 2020 10:43 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து விவசாய அமைப்புகளையும் பிரதமர் மோடி அழைக்காத வரை அரசின் எந்த பேச்சுவார்த்தையிலும் நாங்கள் பங்கேற்க போவதில்லை என விவசாயிகள் பேட்டியில் கூறியுள்ளனர்.

புதுடெல்லி,

விவசாயிகள் நலனுக்கான மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும் அரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி சலோ (டெல்லி நோக்கி பேரணியாக செல்லுதல்) போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.  தொடர்ந்து 8வது நாளாக இந்த போராட்டம் இன்றும் நீடிக்கிறது.

டெல்லி அரசு புராரி பகுதியில், நிரான்கரி சமகம் மைதானத்தில் போராட்டம் நடத்துவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.  எனினும், விவசாயிகள் சிங்கு, சம்பு மற்றும் திக்ரி எல்லை பகுதியிலும் திரண்டுள்ளனர்.

இந்த நிலையில், மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் தலைமையில் விவசாயிகளுடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பல்வேறு மந்திரிகளும் பங்கேற்றனர். இதேபோன்று விவசாயிகள் சார்பில் 35க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.  எனவே இன்று 2-ம் சுற்று பேச்சுவார்த்தை நடக்கிறது.

இதனை முன்னிட்டு மத்திய அரசு பிரதிநிதிகளான நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோருடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் கவலைகள், அதற்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய பதில் போன்றவை குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து, விவசாயிகள் அடங்கிய குழு ஒன்று மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமரை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

இந்நிலையில், சிங்கு எல்லையில் பஞ்சாப் விவசாய சங்க கமிட்டி இணை செயலாளர் சுப்ரான் கூறும்பொழுது, விவசாயிகளை பிரிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது.  அனைத்து 507 விவசாய அமைப்புகளின் தலைவர்களை அழைத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து கூட்டம் நடத்த வேண்டும்.

அப்படி ஆலோசனை கூட்டம் மேற்கொள்ளாதவரை மத்திய அரசின் எந்தவொரு பேச்சுவார்த்தை கூட்டத்திலும் நாங்கள் கலந்த கொள்ள போவதில்லை என்று கூறியுள்ளார்.

Next Story